சென்னை: இந்திய ரயில்வேயை பொறுத்தவரை, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த ஒரு உன்னத போக்குவரத்து சேவையாக விளங்கி வருகிறது. முக்கியமாக பயணிகளின் வசதியையும், நன்மையையும் கருத்தில் கொண்டு ஏகப்பட்ட மாறுதல்களையும், அதிரடிகளையும் மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெற்கு ரயில்வே தற்போது முக்கியப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்ன தெரியுமா?
இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகச் சிறந்த, உன்னதமான போக்குவரத்து சேவையை வழங்கி வருவது இந்திய ரயில்வே துறைதான். ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் ரயில் பயணம் என்பது மறக்க முடியாத, ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கக்கூடிய ஒன்றாகவே எப்போதும் இருந்து வருகிறது.
அப்படியான ரயில் பயணத்தின் போது, ஒரு பயணி தன்னுடன் எவ்வளவு லக்கேஜ் எடுத்துச் செல்லலாம் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இது தொடர்பாக ஒரு முக்கிய விழிப்புணர்வு வீடியோவை தெற்கு ரயில்வே இப்போது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.. அத்துடன் புதிய லக்கேஜ் விதிகளை விளக்கியும் உள்ளது. அந்த பதிவில், "பயணத்திற்கு ரெடியா? லக்கேஜ் லிமிட் தெரியுமா? இந்திய ரயில்வேயில் ஒவ்வொரு வகுப்புக்கும் இலவச லக்கேஜ் அளவு உண்டு. கொஞ்சம் கூடுதலாக இருந்தால், கட்டணம் செலுத்தி எடுத்துச்செல்லலாம். ஆனால் லிமிட்டை தாண்டினால் அபராதம் கட்டவேண்டி வரும். அளவோடு 'பேக்' பண்ணுங்க. அசத்தலா பயணம் செய்யுங்க. குறைவான உடைமைகள், நிறைவான பயணம்" என்று மிகவும் சுவாரசியமான ஒரு விழிப்புணர்வு வாசகத்தை தெற்கு ரயில்வே பதிவு செய்துள்ளது. அத்துடன் பயணிகள் எவ்வளவு எடையுள்ள லக்கேஜ்களை கொண்டு செல்லலாம் என்ற விவரங்கள் அடங்கிய வீடியோவையும் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள விபரங்களின்படி, "நீங்கள் பயணம் செய்யும் வகுப்பிற்கு ஏற்ப லக்கேஜ் எடை மாறுபடும். முதல் ஏ.சி. வகுப்பு (First AC) பெட்டியில் பயணம் செய்யும் ஒரு பயணி அதிகபட்சமாக 70 கிலோ வரையிலும், 2-ம் வகுப்பு ஏ.சி.யில் (Second AC) 50 கிலோ வரையிலும் உடைமைகளை இலவசமாக கொண்டு செல்லலாம். அதேபோல், 3-ம் வகுப்பு ஏ.சி. (Third AC) பெட்டியில் 40 கிலோ வரையிலும், சாதாரண படுக்கை வசதி கொண்ட (Sleeper Class) பெட்டியில் 40 கிலோ வரையிலும் மற்றும் 2-ம் வகுப்பு அமரும் வகையிலான (Second Seating) பொதுப் பெட்டியில் 35 கிலோ வரையிலும் எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக உடைமைகளை எடுத்துச் செல்ல ரயில்வே அனுமதிக்கிறது. ஒருவேளை உங்களுக்கு கூடுதல் லக்கேஜ் தேவைப்பட்டால், அதற்கு ஒரு குறிப்பிட்ட கூடுதல் அனுமதியும் வழங்கப்படுகிறது. பயணிகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட எடையைத் தாண்டி, கூடுதலாக 10 முதல் 15 கிலோ வரை ரயில்வேயின் விதிமுறைகளுக்கு உட்பட்டு லக்கேஜ் கவுண்டரில் காசு கட்டி எடுத்துச் செல்லலாம். இதற்கு சாதாரண உடைமைக் கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கூடுதல் அனுமதி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டு, கட்டணம் செலுத்தப்படும் உடைமைகளுக்கு எவ்வித அபராதமும் விதிக்கப்பட மாட்டாது. ஆனால், இந்த இலவச வரம்பு மற்றும் கட்டணம் செலுத்தி கொண்டு செல்லும் கூடுதல் அனுமதி வரம்பையும் தாண்டி மிக அதிகப்படியான உடைமைகளை ரயிலில் எடுத்துச்சென்றாலோ, அல்லது லக்கேஜ் கவுண்டரில் முன்கூட்டியே எந்தவித முன்பதிவும் செய்யாமல் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் ரயிலுக்குள் லக்கேஜ்களை அள்ளிச் சென்றாலோ, ரயில்வே விதிகளின்படி மிகக் கடுமையான அபராத கட்டணம் வசூலிக்கப்படும்" என்று இந்திய ரயில்வே பயணிகளுக்கு மிகத் தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளது.இந்திய ரயில்வே பயணம்
லக்கேஜ் லிமிட் தெரியுமா
ஏசி ரயில் பெட்டிகள் - கட்டணம் எவ்வளவு