புதிய ரேஷன் கார்டு 2026.. 6 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு எப்போது கிடைக்கும்? அரசு அதிகாரிகள் விளக்கம்

  • சென்னை: தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுமார் 6 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டை எப்போது கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். குடும்ப அட்டைதாரர்களுக்கான இந்த நல்ல செய்தி எப்போது வரும்? ரேஷன் அட்டைகள் அச்சடிக்கும் பணிகள் தற்போது எந்த அளவில் நடைபெற்று வருகின்றன?

    Advertisement

    தமிழகம் முழுவதும் சுமார் 37,328 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக 2 கோடியே 28 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் மற்றும் துவரம்பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

    Advertisement

    அதே நேரத்தில், ரேஷன் கார்டு என்பது வெறும் பொருட்களை வாங்கும் அட்டை மட்டுமே கிடையாது. அரசின் நலத்திட்டங்கள் பலவற்றைப் பெறுவதற்கும் முதன்மையான அடையாளச் சான்றாக அதுவே திகழ்கிறது. இதனால்தான் பொதுமக்கள் புதிய கார்டுகளைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    இத்தகைய சூழலில், கடந்த டிசம்பர் மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்?

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மார்ச் இறுதி வரை இந்தத் தடை நீடித்தது. அதன் பிறகு பணிகள் தொடங்கப்பட்டாலும், கடந்த சில மாதங்களாகப் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெறவில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் ரேஷன் கார்டு இல்லாமல் சில சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

    Advertisement

    புள்ளிவிவரங்களின்படி, கடந்த மார்ச் மாதம் வரை சுமார் 3 லட்சம் பேர் புதிய கார்டு கோரி விண்ணப்பித்திருந்தனர். இதில் 21,000 மனுக்கள் தவிர, மற்ற அனைத்து விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலனையில் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் மேலும் 3 லட்சம் விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமைத் துறைக்கு வந்துள்ளன. இதன் காரணமாக தற்போது மொத்தம் சுமார் 6 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

    ஒரே முகவரியில் பல கார்டுகள்

    இதுகுறித்து அரசு அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "முன்னதாக விண்ணப்பித்த 3 லட்சம் புதிய ரேஷன் கார்டுகளை அச்சடிக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், அதற்குப் பிறகு பெறப்பட்ட 3 லட்சம் விண்ணப்பங்கள் இன்னும் அடுத்தகட்ட பரிசீலனைக்கு வரவில்லை. பொதுவாக, ஒருவருக்குப் புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் எனில் 7 முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன" என்று தெரிவித்தனர்.

    Advertisement

    "குறிப்பாக, ஒரே கதவு எண் கொண்ட வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகக் கூறி விண்ணப்பிக்கும்போது, புதிய கார்டு வழங்குவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன. எனவே, புதிய விண்ணப்பங்கள் குறித்து அதிகாரிகள் நேரில் சென்று முழுமையாக ஆய்வு செய்து, விசாரணை நடத்திய பிறகே ஒப்புதல் அளிக்க முடியும். இத்தகைய களப்பணிகள் காரணமாகவே புதிய கார்டுகள் வழங்குவதில் சில தாமதங்கள் ஏற்படுகின்றன" என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

    இருப்பினும், பொதுமக்கள் தரப்பில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளை அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது.

    Advertisement

    வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

    இதற்கிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உணவுத்துறை தொடர்பான உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஏழை எளிய முதியவர்களுக்கு உதவும் வகையில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிலேயே ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் வயது வரம்பை 60 ஆகக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் லட்சக்கணக்கான புதிய பயனாளிகள் பயன்பெறுவர் என்றும், இத்திட்டத்தை விரிவுபடுத்தத் தேவையான நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English Summary

    Over 6 lakh applicants in Tamil Nadu are currently waiting for their new ration cards amid processing delays. The government is working on verifying applications, particularly in cases involving multiple families at one address. Meanwhile, discussions are underway to expand home delivery of ration goods to more elderly beneficiaries in 2026.