பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகம்.. விஜய்க்கு அதிகரிக்கும் சவால்! நாளை நடக்க போகும் சம்பவம்

  • சென்னை: சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் அரசுத் திட்டத்திற்கு மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளது.

    Advertisement

    சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தற்போது இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடப்பற்றாக்குறை அதிகமாக இருப்பதாகக் கூறி, அதற்கு மாற்றாக பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்காக சுமார் 26.36 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. 15 மாடிகளுடன் பிரம்மாண்டமாக இந்தக் கட்டடம் கட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே இந்தப் பகுதி மக்களுக்கு இடையே எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

    Advertisement

    இந்த நிலம் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏழை மக்கள் மற்றும் மீனவர்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்டதாகும் என்றும், தங்களுக்குச் சொந்தமான இந்த பாரம்பரிய நிலத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்றும் மீனவர்கள் பகிரங்கமாகச் குற்றம்சாட்டுகின்றனர். முல்லிகுப்பம், முல்லிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் இதனால் முற்றிலும் பாதிக்கப்படும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் வழிகள் அடைக்கப்படும் என்றும், விஐபி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலால் தங்களது அன்றாட வாழ்க்கை முடங்கும் என்றும் அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

    Advertisement

    இந்நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகப் போராடும் வகையில் முக்கியமான கட்டமாக, 9 கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் மீனவ சங்கத் தலைவர்கள் கலந்துகொள்ளும் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், அரசு வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற அரசை வலியுறுத்துவது குறித்தும், அடுத்த கட்டமாக எத்தகைய சட்டப் போராட்டங்களையும், நேரடிப் போராட்டங்களையும் முன்னெடுக்கலாம் என்பது குறித்தும் விரிவாக விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

    அரசுத் தரப்பில், தற்போதுள்ள தலைமைச் செயலகம் மிகவும் சிறியதாக இருப்பதால் நிர்வாகப் பணிகளுக்குச் சிரமம் ஏற்படுவதாகவும், அதனால் புதிய கட்டடம் அவசியமான ஒன்று என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கலங்கரை விளக்கம் முதல் அடையாறு வரை 3.5 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், தங்களது வாழ்வாதார நிலத்தைப் பறித்துவிட்டு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதில் மீனவர்கள் உறுதியாக உள்ளனர்.

    Advertisement

    மறுபுறம், மாநிலத்தின் பல முக்கிய அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. திட்டம் தொடங்குவதற்கு முன்பு பொதுமக்களிடமாவது, அப்பகுதி மீனவர்களிடமாவது முறையான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என்றும், அவசரமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. மேலும், இந்த இடம் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால், இங்கு பிரம்மாண்டமான கட்டடம் கட்டுவது இயற்கைக்கு எதிரானது என்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

    ஏற்கனவே பல்வேறு மக்கள் நலப் பிரச்சனைகள் நிலவி வரும் சூழலில், பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரம் இப்போது தமிழக அரசுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் இந்த தொடர் எதிர்ப்புகளையும், அடுத்தடுத்து வரவிருக்கும் போராட்டங்களையும், அரசியல் கட்சிகளின் விமர்சனங்களையும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    New Secretariat at Pattinapakkam: Vijay Faces Major Challenge as Fishermen and Villages Plan Protests