சென்னை: புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் அரசுக்கு அவசரம் ஏன் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். தலைமைச் செயலகம் அமைப்பதற்கான பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. 25 ஏக்கர் பரப்பளவில் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,200 கோடி செலவில் 15 மாடிகள் கொண்ட தலைமைச் செயலகத்தை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்புக்காக 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விஜய் வீட்டின் 100 மீட்டர் தூரத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளது.
இதனால் 12 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் மீனவர்கள், பட்டினப்பாக்கம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர். அதேபோல் அமமுக, பாமக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போது சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், புதிய தலைமைச் செயலகம் கட்டுகிறோம் என்று அவசரமாக அரசாணை வெளியிட்டுள்ளனர். இந்த தலைமைச் செயலகம் இட நெருக்கடியிலும், போக்குவரத்து நெருக்கடியிலும் சிக்கி இருப்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. அதனால் தலைமைச் செயலகம் பொருத்தமான இடத்தில் அமைக்க வேண்டும் என்று பல்வேறு ஆட்சி காலத்திலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கலைஞர் ஆட்சியில் தலைமைச் செயலகம் கட்டப்பட்ட போது, அது ஜெயலலிதாவால் மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தற்போது பட்டினப்பாக்கத்தில் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளார்கள். இதுபோன்ற அரசு அலுவலகங்கள் நீண்ட காலத்திற்கான கட்டுமானம் என்ற முறையில், அவசர கதியில் அரசு செயல்பட கூடாது. ஏற்கனவே மீனவ கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். மற்ற அரசு அலுவலகங்கள் சென்னையில் இருக்கும் போது, சென்னைக்கு வெளியில் தலைமைச் செயலகம் அமைப்பது பொருத்தமாக இருக்காது. இதனால் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில், அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அதுவரை பட்டினப்பாக்கத்தில் எந்தவிதமான பணிகளையும் தொடங்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.