சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்கள் படகுகள், கம்பங்களில் கட்டப்பட்டிருந்த தவெக கொடிகளை அகற்றியுள்ளனர். ஏற்கனவே இன்று மாலை 9 மீனவ கிராமத்தினர் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய தலைமை செயலகம் திட்டத்தை தவெக அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கிய போது மீனவர்கள் பெரும்பாலும் அவருக்கு ஆதரவு அளித்ததாக செய்திகள் வெளிவந்தன. சுறா போன்ற படங்களில் மீனவர்களுக்கு ஆதரவாக நடித்து இருந்ததாலும் கட்சி ஆரம்பித்ததும் மீனவர்கள் பலரும் தங்கள் பகுதிகள் மற்றும் படகுகளில் விஜய்யின் தவெக கொடியினை கட்டியிருந்தனர்.
ஆனால் இன்றைக்கு மீனவர்கள் எதிர்ப்பை மீறி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க விஜய் முயற்சி செய்கிறார் என்றும், இது பற்றி எந்த கருத்துக் கேட்பும் நடத்தாது அதிர்ச்சியளிப்பதாகவும் ஆதங்கம் அடைந்துள்ளனர். எனவே பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைப்பது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்று ஆலோசிக்க முல்லிகுப்பம், முல்லிநகர் உள்ளிட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் தவெக அரசு திட்டத்தினை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மற்றும் மக்களின் கருத்துக்களை கேட்காமல் தலைமை செயலகம் அமைக்கும் முடிவு ஆபத்தானது என்றும், பட்டனிப்பாக்கம் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை கைவிடும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் மீனவ பிரதிநிதிகள் கூட்டாக பேட்டியளித்துள்ளனர். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய தலைமை செயலகம் அறிவிப்பு முதல்வர் விஜய் கைவிட வேண்டும் எனவும் இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், "மக்களிடமும் இது பற்றி இதுவரை எந்த கருத்துக் கேட்பும் நடத்தவில்லை. இது போக மக்களுக்கு நலத்திட்டம் செய்ய கஜானாவில் பணம் இல்லை என்று சொல்லி வந்த விஜய் இந்த திட்டத்தினை அறிவித்து இருக்கிறார். கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் அரசு கஜானாவை காலி செய்துவிட்டு போனதாக சொல்லிவிட்டு, இப்போது தலைமை செயலகம் கட்ட மட்டும் ரூ.1,200 கோடி எப்படி ஒதுக்கீடு செய்தார்" என்று கேள்வி எழுப்பினர். படங்களில் மீனவர்களுக்கு ஆதரவாக நடித்து விட்டு இப்போது மீனவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது சரியா என்றும், இந்த புதிய தலைமை செயலகம் திட்டத்தினை மறுபரிசீலனை செய்யவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் மீனவர்கள் தங்களது எதிர்ப்பை காட்டும் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் தங்களது படகுகள், கம்பங்களில் கட்டப்பட்டு இருந்த தவெக கொடிகளை அகற்றி வருகிறார்கள். தேர்தல் சமயத்தில் விஜய்க்கு ஆதரவு அளித்து படகுகளில் கட்டி வைத்த தவெக கொடிகளை அகற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும் சில மீனவர்கள் தவெக கொடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக கருப்பு கொடிகளை கட்டி வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் ஆளும் தவெக அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.9 கிராம மீனவர்கள் ஆலோசனை கூட்டம்
மாபெரும் போராட்டம் நடத்தப்படும்
தவெக கொடிகளை அகற்றிய மீனவர்கள்