பட்டினப்பாக்கத்தில் புது தலைமை செயலகம்.. நெரிசலை சமாளிக்க மெரினாவில் வருது உயர்மட்ட மேம்பாலம்

  • சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பட்டினப்பாக்கத்தில், தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுமார் 26.36 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்திற்குப் பதிலாக, அனைத்து வசதிகளும் கொண்ட நவீன ஒருங்கிணைந்த வளாகத்தைக் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    Advertisement

    15 மாடிகள்; 20 லட்சம் சதுர அடி பரப்பு

    புதிதாக அமையவுள்ள இந்த தலைமைச் செயலகக் கட்டடம் 15 மாடிகளைக் கொண்டதாக இருக்கும். மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து அரசுத் துறைகளும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் நவீன முறையில் இது வடிவமைக்கப்பட உள்ளது.

    தலைமைச் செயலகத்திற்குத் தேவையான நிலத்தைத் தேர்வு செய்ய மூன்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் பட்டினப்பாக்கம் பகுதிதான் மிகவும் பொருத்தமானது என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அரசுக்குச் சொந்தமான இடம் எளிதாகக் கிடைப்பதும், திட்டத்திற்கான அனுமதிகளை விரைவாகப் பெறுவதும் இந்த இடம் தேர்வானதற்கு முக்கியக் காரணமாகும்.

    Advertisement

    இந்த நிலத்தில் பெரும்பகுதி சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமானது. புதிய கட்டடம் கட்டுவதற்காக இந்த இரண்டு துறைகளும் தடையில்லாச் சான்றிதழை (NOC) ஏற்கெனவே வழங்கிவிட்டன. திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ நிர்வாக அனுமதியை அரசு இன்னும் சில நாட்களில் அரசாணையாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அமைவிடம் எங்கே?

    பட்டினப்பாக்கத்தில் உள்ள ஃபோர்ஷோர் எஸ்டேட் குடியிருப்புப் பகுதி, விளையாட்டு மைதானம் மற்றும் சாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் என மொத்தம் 25.16 ஏக்கர் நிலம் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டது. இதுதவிர, வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத மற்றொரு 1.2 ஏக்கர் நிலமும் சேர்க்கப்பட்டு, மொத்தம் 26.36 ஏக்கர் நிலப்பரப்பு இந்த வளாகத்திற்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.

    Advertisement

    இந்தப் பகுதியின் வடக்கே சாந்தோம் மற்றும் மயிலாப்பூர் பகுதிகளும், கிழக்கே வங்காள விரிகுடா கடலும், தெற்கே அடையாறு முகத்துவாரமும் எல்லைகளாக உள்ளன. மேலும், ராஜா அண்ணாமலைபுரம் மந்தைவெளிப்பாக்கம் சவுத் கெனால் பேங்க் சாலையில் உள்ள முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் முகாம் அலுவலகத்தில் இருந்து வெறும் 350 மீட்டர் தொலைவிலேயே இந்த இடம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக 2021-ஆம் ஆண்டில், அப்போதைய திமுக அரசு இந்த இடத்தில் சிங்கப்பூர் பாணியில் "மெரினா வணிக மையம்" அமைக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அங்கு வசித்து வந்த மக்களின் குடியிருப்பு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் அந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அந்த வழக்குகள் அனைத்தும் கடந்த மே மாதம் முடித்து வைக்கப்பட்டன. வீட்டு வசதி வாரிய குடியிருப்பாளர்களுக்கு மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அரசு நிலம் தடையின்றி கைக்கு வந்துள்ளது.

    Advertisement

    போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க 3.5 கி.மீ உயர்மட்ட மேம்பாலம்

    புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்திற்கு வரும்போது அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் சிரமம் ஏற்படாமல் இருக்க, கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு.வி.க பாலம் வரை 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

    சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாகப் பாலம் அமைக்கலாமா அல்லது பட்டினப்பாக்கம் லூப் ரோடு வழியாக அமைக்கலாமா என்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்த பின் இறுதி செய்யப்படும். இந்தப் பாதையில் ஏராளமான பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்புகள் இருப்பதால் சாலையை அகலப்படுத்துவது சாத்தியமில்லை. அதனால்தான் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த மேம்பாலத் திட்ட அறிக்கையைத் தயாரிக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகப் பணிகளுக்கான ஒப்புதல் கிடைத்ததும், மேம்பாலப் பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிடப்படும்.

    English Summary

    New Tamil Nadu Secretariat at Pattinapakkam: 15-Storey Complex & 3.5 km Elevated Corridor Planned