சென்னை: சென்னை ஜார்ஜ் கோட்டையில் நிலவும் இடநெருக்கடியை சரிசெய்யும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய சட்டசபை, தலைமைச் செயலகம் சென்னையில் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தைத் தோ்வு செய்வது தொடா்பாக முதல்வா் ஜோசப் விஜய் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
சென்னை ஜார்ஜ் கோட்டையில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால், புதிய தலைமைச் செயலகம் கட்ட கடந்த ஆட்சியிலேயே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கட்ட முடியவில்லை. இந்நிலையில், 100 ஆண்டுகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் சென்னையில் புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று முதல்வா் விஜய் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தாா்.
ஆனால், எந்த இடத்தில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. சென்னை பட்டினப்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இடங்களில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான துறை சார்ந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த இடங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடல் பகுதிக்கு அருகே உள்ள பட்டினப்பாக்கம் பகுதியில் அமைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடத்தை முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்தார்களாம். இந்நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து முதல்வா் விஜய் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், பொதுப்பணித் துறை, வருவாய், நகராட்சி நிா்வாகம், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.