சென்னை: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கவும், தடையற்றப் பயணத்தை உறுதி செய்யவும் பல்வேறு புதிய தொழில்நுட்ப மாற்றங்களைக் கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சுங்கச்சாவடிகளைச் சுற்றியுள்ள 20 கிலோமீட்டர் எல்லைக்குள் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு டிஜிட்டல் முறையில் லோக்கல் பாஸ் வழங்கும் புதிய திட்டத்தை NHAI அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
முன்பெல்லாம் சுங்கச்சாவடிக்கு உட்பட்ட 20 கி.மீ சுற்றளவில் வசிக்கும் மக்கள், கட்டண விலக்கு அல்லது மாதந்திரக் கட்டண பாஸ் பெற நேரடியாகச் சுங்கச்சாவடி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு முகவரிச் சான்று, வாகனப் பதிவுச் சான்று உள்ளிட்ட பல ஆவணங்களை நேரில் சமர்ப்பித்துச் சரிபார்க்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது இந்த முறை முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே, மத்திய அரசின் ராஜ்மார்க்கயாத்ரா மொபைல் செயலி மூலம் சில நிமிடங்களில் இந்த டிஜிட்டல் லோக்கல் பாஸை விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். வாகனம் தொடர்பான அனைத்து விபரங்களும் வாகனப் பதிவுத் தளமான வாகன் வழியாகவே சரிபார்க்கப்படும். வாகனத்தின் எண், உரிமையாளரின் முகவரி மற்றும் இணைக்கப்பட்டுள்ள ஃபாஸ்டேக் (FASTag) கணக்கு ஆகியவை தானாகவே இந்த செயலியின் மூலம் சரிபார்க்கப்பட்டு பாஸ் வழங்கப்படும். தற்போது சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்காமல் செல்லும் மல்டி-லேன் ஃப்ரீ ஃபுளோ என்ற தடுப்பிலா சுங்கச்சாவடி முறை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொழில்நுட்பத்தில், சுங்கச்சாவடிகளில் தடுப்புகள் எதுவும் இருக்காது. அதிநவீன ரேடியோ ஃபிரீக்வென்சி ஐடென்டிஃபிகேஷன் கருவிகள் மற்றும் தானியங்கி கேமராக்கள் (ANPR Cameras) மூலம் வாகனங்களின் ஃபாஸ்டேக் எண்களைக் கண்டறிந்து தானாகவே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். டெல்லியில் உள்ள நகர்ப்புற விரிவாக்கச் சாலை-2 பக்கர்வாலா சுங்கச்சாவடியில் இந்த முறை மே 11 அன்று செயல்பாட்டுக்கு வந்தது. இங்குதான் முதல்முறையாக இந்த டிஜிட்டல் லோக்கல் பாஸ் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளின்படி, வணிகம் சாராத சொந்த வாகன வைத்திருக்கும் உள்ளூர்வாசிகள் மாதம் ரூ. 350 செலுத்தி லோக்கல் பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் அந்த குறிப்பிட்ட சுங்கச்சாவடியை மாதம் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் கடந்து செல்ல முடியும். தடுப்பிலா சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்ட பிறகு, லோக்கல் பாஸ் இல்லாத பல உள்ளூர்வாசிகள் வழக்கமான பழக்கத்தில் கட்டணம் செலுத்தாமல் கடந்து சென்றதால், அவர்களுக்குத் தானியங்கி முறையில் அபராத நோட்டீஸ்கள்அதிகளவில் செல்லத் தொடங்கின. இந்த சிக்கலுக்குத் தீர்வாகவே தற்போதைய டிஜிட்டல் பாஸ் வசதியை NHAI அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லியில் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த வசதி, விரைவில் நாடு முழுவதிலும் உள்ள பிற சுங்கச்சாவடிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை 48-இல் சுங்கச்சாவடிகள், மற்றும் தேசிய நெடுஞ்சாலை 45-இல் உள்ள பரனூர் சுங்கச்சாவடி ஆகியவற்றிலும் இந்த மல்டி-லேன் ஃப்ரீ ஃபுளோ (MLFF) முறையைக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, மிக விரைவில் தமிழகத்தைச் சேர்ந்த வாகன ஓட்டிகளும் இந்த ராஜ்மார்க்கயாத்ரா செயலி மூலம் டிஜிட்டல் லோக்கல் பாஸ் பெற்றுப் பயன்பெற முடியும்.ராஜ்மார்க்கயாத்ரா செயலி மூலம் உடனடி பாஸ்
தடையில்லா சுங்கச்சாவடி முறை
உள்ளூர் மக்களுக்கு மாதக் கட்டணம் ரூ. 350 மட்டுமே
தமிழகத்திலும் விரைவில் அமல்!