சென்னை: முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு என் மீது தனிப்பட்ட ஈகோ, அதனால்தான் அவர் என்னை பற்றி இல்லாததை எல்லாம் சொல்கிறார் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமாரிடம் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், தென் தமிழகத்திற்கு நிர்மல் குமார்தான் முதல்வர், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவரை ராஜினாமா செய்யக் கோரி அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது குறித்து நிர்மலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நிர்மல் குமார், "3 மாதங்களாக என்னிடம் நிறைய பேர், கோயில் அறங்காவலர் குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அரசே அவரை நீக்க வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்திருந்தனர். அப்போது அவர்களிடம் நான் தெளிவாக கூறிவிட்டேன். கோயில் விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம். அவராகவே ராஜினாமா செய்தால் அதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என சொல்லிவிட்டேன். ஏனென்றால் கும்பாபிஷேகத்தில் எந்த தடங்கலும் வந்துவிடக் கூடாது என்பதுதான் எங்களது ஒரே நோக்கமாக இருந்தது. நான் மதுரை மாவட்டத்து பொறுப்பு அமைச்சர் என்பதால் கும்பாபிஷேகத்தில் நிர்வாக ரீதியில் மட்டுமே என் தலையீடு இருந்தது. அதாவது சுகாதாரத் துறை, கார்பரேஷன், காவல் துறை, பாதுகாப்பு உள்ளிட்டவைகளை மட்டுமே நான் செய்தேன். கோயில் உள்விவகாரத்தில் எந்த விதத்திலும் நான் தலையிடவில்லை. கும்பாபிஷேகத்தின் போது பிடிஆரின் தாய் ருக்மணியம்மாள் வந்த போது அவரை நான்தான் அழைத்துச் சென்று அமர வைத்தேன். அவரை நன்றாக கவனித்துக் கொண்டோம். கும்பாபிஷேகத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே ஆட்சியர் உள்ளிட்டோரிடம் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி அம்மாளுக்கு என்ன தேவையோ அதை செய்துவிடுங்கள், அவரது ஆலோசனையையும் பெறுங்கள் என சொல்லிவிட்டேன். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என் மீது 8 ஆண்டுகளாகவே தனிப்பட்ட ஈகோவில் இருக்கிறார். பிடிஆர் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்யாண மண்டபம், அவரது ஈகோவால் முடக்கி வைத்திருந்தார். அந்த டிரஸ்ட்டில் இருப்பவர்கள் (பிடிஆர் உறவினர்கள்) என்னை வந்து சந்தித்தார்கள், அப்போது "பிடிஆர், தனது அரசியல் செல்வாக்கை வைத்து டிரஸ்ட்டை முடக்கி வைத்திருக்கிறார், 3 ஆண்டுகளாக எந்த வேலையையும் செய்யவிடவில்லை, தவறான வரி போட்டு எங்களை செலுத்த வைத்திருக்கிறார்" என தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் நான் சொன்னது உங்கள் குடும்ப விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன். திருமண மண்டபம் செயல்பட சட்டரீதியாக எந்த உதவியும் செய்ய தயார் என்றேன். இதையடுத்து தற்போது அந்த கல்யாண மண்டபத்தை திறப்பதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்து வருகிறார்கள். எனவே சொந்த ஈகோவால் அவரது சொந்த கல்யாண மண்டபத்தை 3 ஆண்டுகளாக முடக்கி வைத்திருக்கிறார். இப்போது கூட மதுரை மாநகராட்சிக்கு போன் செய்த பிடிஆர், திருமண மண்டபத்தை திறக்க எப்படி அனுமதித்தீர்கள் என சண்டை செய்கிறாராம். அவர் திமுக ஆட்சியில் நன்றாக செயல்பட்டிருந்தால் எதற்காக நிதியமைச்சர் பொறுப்பை அவரிடம் இருந்து பறித்தார்கள்? ரூ 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்ததாக ஒரு ஆடியோவில் அவர் பேசியது போல் வந்ததே, அந்த ஆடியோ குறித்து பிடிஆர் விளக்கம் கொடுப்பாரா? இல்லாவிட்டால் தடயவியல் துறைக்கு ஆடியோவை அனுப்பி பரிசோதனை செய்ய தயாராக இருக்கிறாரா? அவர் மீது சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதை பற்றியெல்லாம் நாம் பேசவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நல்லபடியாக நடந்தது, அந்த வயிற்றெரிச்சல் தாங்காமல் இப்படி பேசுகிறார். அவருடைய ஈகோவால் அவருடன் யாராலும் இணைந்து செயல்பட முடியாது. அந்த மண்டபத்தை திறக்க விடாமல் இருக்கவே பிடிஆர் முழு நேரமும் பணியாற்றியதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். மதுரை மீனாட்சி கோயிலை கட்டிய பாண்டிய மன்னனை விட பிடிஆர், அந்த கோயிலுக்கு செய்தது, நாங்கள்தான், நாங்கள்தான் என பெருமை பேசி வருகிறார். இவ்வாறு நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.கும்பாபிஷேகம்
3 நாட்கள்
பிடிஆர் தாயாரை கவனித்தோம்
திருமண மண்டபம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்