சென்னை: பூமியின் துடிப்பை மில்லிமீட்டர் துல்லியத்தில் அளவிடும் உலகின் அதிநவீன 'நிசார்' செயற்கைக்கோள், நேபாளத்தில் நிகழ்ந்த கோரமான பனிப்பாறை பெருவெள்ளத்தில் எவ்வித முன்னறிவிப்போ, பொதுத் தரவுகளோ இன்றி மௌனம் சாதிப்பது சர்வதேச அறிவியல் வட்டாரத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது.
நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இணைந்து சுமார் $1.3 பில்லியன் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.10,800 கோடி) செலவில் விண்ணில் செலுத்திய கூட்டுத் திட்டம்தான் நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar). பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறு அதிர்வுகள், நிலச்சரிவுகள், நில அதிர்வுகள், பனிப்பாறை நகர்வுகள் மற்றும் பருவநிலை மாற்றங்களை மில்லிமீட்டர் துல்லியத்தில் தொடர்ந்து கண்காணித்து பேரிடர் மேலாண்மைக்குத் தேவையான எச்சரிக்கைகளை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாக அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக, மிகவும் மென்மையான புவியியல் அமைப்பைக் கொண்ட இமயமலைப் பிராந்தியத்தைக் கண்காணிப்பதே நிசாரின் முக்கிய இலக்காக முன்னிறுத்தப்பட்டது. நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் சமீபத்தில் பனிப்பாறை சரிவு மற்றும் திடீர் நிலச்சரிவு காரணமாக வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் நிகழ்ந்தது. பனி, பாறை மற்றும் சேறு பெருக்கெடுத்து ஓடிய இந்த அழிவு, சரியாக நிசார் கண்காணிக்க உருவாக்கப்பட்ட அதே நிகழ்வுதான். ஆனால், இத்தகைய பிரம்மாண்டப் பேரிடர் நிகழ்ந்த பிறகும், நிசார் செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்ட ஆய்வு முடிவுகளோ, முன்கூட்டிய எச்சரிக்கை சமிக்ஞைகளோ அல்லது விரிவான அறிவியல் தரவுகளோ பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இஸ்ரோ தனது கார்டோசாட், ரிசோர்ஸ்சாட் படங்களையும், பிளானட் லேப்ஸ் நிறுவனமும் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், நிசார் மட்டும் மாயமாகியுள்ளது பொதுமக்களையும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விண்ணில் செலுத்தப்பட்ட ஓராண்டு நிறைவை நாசாவும் இஸ்ரோவும் சமீபத்தில்தான் விமரிசையாகக் கொண்டாடின. நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத் திட்ட விஞ்ஞானி டாக்டர் பால் ரோசன் நிசார் பற்றி பேசுகையில், "இது பூமியின் நில மற்றும் பனி நகர்வுகளை 3D வடிவில் பதிவு செய்யும். நிலச்சரிவு மற்றும் பனி ஏரி உடைப்பு வெள்ள அபாயங்களை முன்கூட்டியே அறியும் திறன் கொண்டது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஜூன் மாதம் வெனிசுலாவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, நிசார் வழங்கிய புவி மேற்பரப்பு மாற்ற வரைபடங்கள் மீட்புப் பணிகளுக்குப் பெரிதும் உதவின. மேலும், "நிசாரின் தரவுகள் அனைத்தும் ஆய்வுக்குப் பின் தாமதமின்றி வெளிப்படையாகப் பொதுத்தளத்தில் பகிரப்படும்" என்றும் உறுதியளிக்கப்பட்டது. அப்படி இருக்க, இமயமலையின் மிக மோசமான பேரிடரின் போது நிசாரின் கண்காணிப்புத் தகவல்கள் எங்கே போயின என்ற நியாயமான கேள்வி எழுகிறது. இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விஞ்ஞானிகள் சிலர் வேறு விளக்கங்களை அனுப்புகின்றனர். "நிசார் என்பது தரவுகளைச் சேகரிக்கும் கருவி மட்டுமே.. அதை மனிதர்கள்தான் ஆய்வு செய்ய வேண்டும். இமயமலை முழுவதும் இயல்பான மற்றும் அசாதாரண மாற்றங்களைக் கண்டறியும் தானியங்கி வழிமுறைகள் இன்னமும் முழுமை பெறவில்லை. இன்னும் நிறைய மாடல்கள் வைத்து சோதிக்க வேண்டும். இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இது போன்ற திடீர் பேரிடர்களை முன்கூட்டியே கணிக்க சிறிது காலம் எடுக்கும்.. என்று தெரிவித்துள்ளார். 12 மீட்டர் விரிவடையக்கூடிய ரேடார் ஆன்டெனாவுடன் பூமியைச் சுற்றிவரும் அதிநவீன நிசார் செயற்கைக்கோள், இமயமலையின் அசைவுகளை முன்கூட்டியே கணித்ததா, அல்லது சேகரிக்கப்பட்ட தரவுகள் இன்னும் தீவிர ஆய்வில்தான் உள்ளதா என்ற சந்தேகங்கள் நீடிக்கின்றன. கோடிகள் கொட்டி உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோளின் மௌனம் அறிவியல் உலகை உற்றுநோக்க வைத்துள்ளது.நேபாள பேரிடரும் நிசாரின் மௌனமும்
முந்தைய வாக்குறுதிகளும் எதிர்பார்ப்புகளும்
விஞ்ஞானிகளின் விளக்கம் என்ன?