நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.. பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!

  • சென்னை: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விஜய் விரிவாகப் பேசியிருந்தார். குறிப்பாக மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வ ஒத்துழைப்போடு செயல்படத் தமிழக அரசு தயாராக இருப்பதாகக் கூறிய முதல்வர் விஜய், நீட் தேர்வு விலக்கு குறித்தும் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    நிதி ஆயோக் கூட்டம் இன்றைய தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்கத் தமிழ்நாடு முதல்வர் விஜய் நேற்றைய தினமே டெல்லி சென்றிருந்தார். நேற்று அவர் குடியரசுத் தலைவர் முர்மு, துணை குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்திருந்தார். இதற்கிடையே இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய் நீட் விலக்கை வலியுறுத்தினார்.

    Advertisement

    முதல்வர் விஜய்

    இது தொடர்பாக நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசுகையில், "இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறவும், அனைத்துத் தரப்பு மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் அமைந்திட செயல்படுத்தப்படும் திட்டங்களை முழு மனதோடு வரவேற்போம். மேலும், அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள், கூட்டுறவுக் கூட்டாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலமாக மட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று தமிழ்நாடு உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.

    மத்திய அரசுடன் ஒத்துழைப்பு

    வெளிப்படையான நிர்வாகம், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சமச்சீரான முன்னேற்றம் ஆகிய அடிப்படைக் கொள்கைகளை முன்னிறுத்தி, தமிழ்நாட்டு மக்கள் எங்கள் அரசுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளனர். அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டின் நலன்களையும் மக்களின் விருப்பங்களையும் உறுதியாகப் பாதுகாக்கும் வேளையில், மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு எங்கள் அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

    Advertisement

    1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்

    உலகளாவிய அளவில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழல்களுக்கு இடையிலும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் தமிழ்நாடு, தனது உறுதித்தன்மையையும் தொடர்ச்சியான வளர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறது. பல்வேறு துறைகளை உள்ளடக்கிய வலுவான பொருளாதார அமைப்பு மற்றும் நமது தொழிலாளர்களின் உற்பத்தித் திறனைப் பிரதிபலிக்கும் வகையிலும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நமது அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையிலும், 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதற்கு தமிழ்நாடு பணியாற்றி வருகிறது.

    இந்தத் தொலைநோக்குப் பார்வை இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் விவசாயிகள் என்ற நான்கு முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றில் தமிழ்நாட்டின் முன்னுரிமைகள் ஒவ்வொன்றுடனும் நெருக்கமாக இணைந்துள்ளன. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் பயணத்திற்கும் இன்றியமையாத சில முக்கிய முன்னுரிமைகளை, இம்மாண்புமிகு ஆட்சிமன்றத்தின் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

    Advertisement

    நீட் வேண்டாம்

    அதேபோல், நமது மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. ஏனெனில், இந்தத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கிராமப்புற மாணவர்களும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே, மேற்கண்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் (MBBS), பல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலைப் பட்டம் (BDS) மற்றும் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவப் படிப்புகளில் (AYUSH) மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    Advertisement

    கோவைக்கு எய்ம்ஸ்

    உயர்தர மருத்துவச் சிகிச்சையை மேலும் வலுப்படுத்தவும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்வியை வழங்கவும், தரமான மருத்துவச் சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைத்திடவும், தமிழ்நாட்டிற்கு இரண்டாவது எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையைக் கோயம்புத்தூரில் அமைக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்குத் தேவையான நிலத்தை மாநில அரசு வழங்கும்" என்று அவர் பேசியிருந்தார்.

    English Summary

    Tamil nadu CM Vijay Attending the NITI Aayog Governing Council meeting in New Delhi chaired by PM Modi(நீட் விலக்கு குறித்து பிரதமர் மோடியிடம் விஜய் கோரிக்கை): Vijay Demands NEET Exemption latest news in tamil.