திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்!

  • விஜய் முதல்வரானதும் மத்திய அரசு அடுத்தடுத்து முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து வருகிறது கவனிக்க கூடிய விஷயமாக உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு சென்னை போக்குவரத்தின் உயிர்நாடியாக இருக்கும், புறநகர் ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் முக்கிய திட்டமாக விளங்கும் சுமார் ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரையிலான இரட்டை ரயில் பாதைக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

    Advertisement

    இதை தொடர்ந்து தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழ்நாட்டில் முக்கிய உள்கட்டமைப்பு திட்டத்துக்கு பெரும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

    Advertisement

    திருவாரூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 4 வழிப் பைபாஸ் சாலைக்கு ரூ.1,427.61 கோடி நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நிதின் கட்கரி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டு முதல்வர் விஜயை டேக் செய்து பகிர்ந்துள்ளார்.

    திட்டத்தின் முக்கிய விவரங்கள்

    இந்த ரூ.1,427.61 கோடி திட்டத்தில் என்ஹெச்-83 (நாகப்பட்டினம் - தஞ்சாவூர்) பிரிவில் 14.9 கிலோமீட்டர் நீளத்தில் 4 வழிப் பைபாஸ் சாலை கட்டப்படும். இதுதவிர என்ஹெச்-129ஏ மற்றும் என்ஹெச்-134ஏ ஆகியவற்றில் 2 கூடுதல் ஓவர் பிரிட்ஜுகளும் (ROBs) அமைக்கப்படும். இந்த திட்டம் திருவாரூர் நகரைச் சுற்றி இருக்கும் முக்கிய தொழில் நகரங்களுக்கு பெரிய வகையில் லாபகரமாக அமையும் என திட்டமிடப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த முக்கியமான பைபாஸ் சாலை ஆதியக்கமங்கலம் - தண்டலாய் பகுதியில் இருந்து தொடங்கி, அதிபுலியூர், ஆண்டிபாளையம், கிடாரம் கொண்டான், பள்ளிவாரமங்கலம், பெரும்புகழூர், எலவங்கர்குடி, அனைவடபதி காலனி உள்ளிட்ட பல முக்கிய இடங்களின் வழியாக செல்லும்.

    மேலும் இந்த பைபாஸ் சாலை திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் போன்ற முக்கிய தொழில் நகரங்களை காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற துறைமுக நகரங்களுடன் சிறப்பாக இணைக்கும். இதன் மூலம் ஏற்றுமதி பொருட்களின் போக்குவரத்து எளிதாகி, பிராந்திய பொருளாதாரம் பெருமளவில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இந்த புதிய பைபாஸ் சாலை எஸ்.எச்-23, எஸ்.எச்-65 ஆகிய 2 மாநில நெடுஞ்சாலைகளுடன் மேம்பட்ட இணைப்பை ஏற்படுத்தும். குறிப்பாக திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பயணம் மிகவும் வசதியாக இருக்கும்.

    Advertisement

    மத்திய அரசு

    தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்த திட்டம் மூலம் திருவாரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும், மேலும் இத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

    திருவாரூர் நகருக்குள் ஏற்கனவே அதிக போக்குவரத்து நெரிசலில் சிக்கும் போக்குவரத்தை இந்த பைபாஸ் சாலைக்கு திசை திருப்பும். இதனால் நகரின் மையப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நெரிசல் கணிசமாகக் குறையும். பயண நேரம் சுமார் 15 நிமிடங்கள் வரை குறையும் என மத்திய அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

    Advertisement

    மேலும், நெரிசலான பகுதிகளில் இருந்து வாகனங்களை திருப்புவதன் மூலம் விபத்துகள் குறையும் மற்றும் சாலை பாதுகாப்பு அதிகரிக்கும். இது தினசரி பயணம் செய்யும் மக்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் பயனைத் தரும்.

    English Summary

    Union Minister Nitin Gadkari has sanctioned Rs.1,427.61 crore for the construction of a 4-lane Thiruvarur Bypass spanning 14.9 km on NH-83, along with two additional ROBs, to ease traffic congestion and enhance connectivity in Tamil Nadu. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திருவாரூர் 4 வழி பைபாஸ் சாலைக்கு ரூ.1,427.61 கோடி ஒப்புதல் அளித்துள்ளார்.