தவெகவுக்கு வரும் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் சமரசம் இல்லை - அமைச்சர் CTR நிர்மல் குமார்

  • சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவில் இணைய உள்ளனர். தங்கள் மீதான வழக்கு பயத்தால் அவர்கள் தவெகவில் இணைவதாக விமர்சிக்கப்படும் நிலையில், அதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார். தவெகவில் சேருபவர்கள் மீதான வழக்கில் எந்த சமரசமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்தத் தேர்தலில் தவெக மற்றும் திமுகவுக்கு அடுத்தபடியாக அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தத் தோல்வி அதிமுகவினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், உட்கட்சிப் பூசல்வெடித்தது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் பிரிந்து தனி அணியாக உருவெடுத்தனர்.

    Advertisement

    பின்னர், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானமாகினர். அதேநேரம், அதிருப்தி அணியில் இருந்த அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் முடிவை அறிவிக்காமல் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தவெகவில் இணைய உள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, கட்சியிலிருந்து விலகியுள்ளார். முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் நாளை (ஜூலை 2) மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணையவுள்ளனர்.

    Advertisement

    இவர்களுடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், வழக்குகள் நெரிப்பதால் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு செல்கின்றனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகுபவர்களின் பின்னணியில் வழக்கு பயம் மட்டுமே உள்ளது. சுயநலத்துக்காகவே அதிமுகவில் இருந்து விலகி வருகின்றனர்.சொத்துக்குவிப்பு வழக்குகள் நெரிப்பதால் அதிமுகவை விட்டு வெளியேறுகின்றனர் என்றும் கூறினார்.

    முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தவெக செல்வது வழக்கு பயம் காரணமாகத்தான் என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்.

    Advertisement

    இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார். அப்போது, வழக்கு பயம் காரணமாகவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைவதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிர்மல் குமார், "தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் எங்கள் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அவர்கள் மீதான வழக்குகளில் எந்த சமரசமும் கிடையாது. சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Former AIADMK ministers C Vijayabaskar and MR Vijayabaskar are set to join TVK. Amidst criticism that they are joining the party out of fear regarding the cases pending against them, Law Minister CTR Nirmal Kumar has responded to the issue, stating that there will be no compromise regarding the cases against those joining TVK.