முதல்வர் விஜய்யும் ஆளுநரும் ஆழமான புரிதலுடன் வெற்றிக் கூட்டணி அமைத்துள்ளனர்” - அமைச்சர் விஸ்வநாதன்

  • சென்னை: "தமிழகத்தில் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பவில்லை. முதலமைச்சரும், ஆளுநரும் மிக ஆழமான புரிதலுடன் வெற்றிக் கூட்டணியை அமைத்திருக்கிறோம்." என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் ஜோசப் விஜய் நடைபெறும் தவெக ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன், ராஜேஷ்குமார் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். இந்நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக காங்கிரஸ் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, வைகை விவகாரத்தில் ஆளுநர் மாளிகையே நேரடியாக இறங்கும் எனப் பேசினார். மேலும், மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார் ஆளுநர் அர்லேகர்.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும், ஆளுநருக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரும் இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், வைகை அணை, துணை வேந்தர்கள் என ஆளுநரின் தலையீடு அதிகம் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    Advertisement

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் விஸ்வநாதன், "முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான நாங்கள் ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை. மாறாக முதலமைச்சரும், ஆளுநரும் மிக ஆழமான புரிதலுடன் வெற்றிக் கூட்டணியை அமைத்திருக்கிறோம்.

    தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாப்பதற்கான எந்த முடிவையும் எடுப்பதற்கு முதலமைச்சர் விஜய் காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், ஆளுநருடன் மிக அற்புதமான உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்து கல்லூரிகளுக்கும் துணை வேந்தர்கள் விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதற்கான விரைவான திட்டத்தை முதலமைச்சரும், ஆளுநரும் மிக அழகான புரிதலோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

    மேலும் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், "புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு, தமிழக அரசிடம் பேசி விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். திருச்செந்தூரில் புதுச்சேரி பக்தர்களுக்கான விடுதி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    Advertisement

    உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் படியும், ஒப்பந்தங்களின் படியும் புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய 7 டி.எம்.சி. காவிரி தண்ணீரை வழங்குவதை சீர் செய்ய வேண்டும், புதுச்சேரிக்கு என தனியாக ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக முதல்வர் விஜய்யிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “We do not wish to adopt a confrontational stance towards the Governor in Tamil Nadu. The Chief Minister and the Governor have forged a successful partnership based on a deep mutual understanding,” stated Tamil Nadu Higher Education Minister Viswanathan.