அதிவீரிய கொரோனா பரவல்?.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு

  • சென்னை: தமிழகத்தில் அதிக வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் வகை பரவி வருவதாக கூறப்படுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. கடந்த ஆண்டுகளை விட தற்போது கொரோனா தொற்று குறைவாகவே உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    Advertisement

    கொரோனா பரவல் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆந்திராவை சேர்ந்த 52 வயதுடைய நபர் திருப்பதி தனியார் மருத்துவமனையில் இருந்து கடந்த ஜூன் 26 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக வேலுார் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு கிளெப்சில்லா நிமோனியா எனும் பாக்டீரியா பாதிப்பும், கொரோனா பாதிப்பும் ஏற்பட்டிருந்தது.

    Advertisement

    அத்துடன் நீரிழிவு நோய் மற்றும் நீண்ட கால சிறுநீரக நோய் போன்ற இணை பாதிப்புகள் இருந்தன. கடந்த 28 ஆம் தேதி அவர் உயிரிழந்தார். அதேபோல, வேலுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது நபர் பெருங்குடல் புற்றுநோயால் ஏற்பட்ட சுவாச செயலிழப்பு காரணமாக இறந்தார். இந்த நிகழ்வில் கொரோனா ஒரு தற்செயலான கண்டறிதலாக இருந்தது.

    மேலும், ஆந்திரா, கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயது நபர் கடப்பா மருத்துவமனையில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தார். இது, ஆந்திரா சுகாதாரத் துறையால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    Advertisement

    தமிழகத்தில் இந்த ஆண்டு 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவை அனைத்தும் வழக்கமான நோய் கண்காணிப்பின்போது கண்டறியப்பட்டவை. நோய் தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டவை அல்ல. பதிவான பெரும்பாலான நோயாளிகளுக்கும், லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டுள்ளன.

    நோயின் தீவிரம் அதிகரித்ததற்கான அல்லது வழக்கத்திற்கு மாறாக மருத்துவ வெளிப்பாடுகளுக்கான எந்த ஆதாரமும் இல்லை. எனினும், முதியோர், கர்ப்பிணியர், நீண்டகால உடல்நல குறைபாடு உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

    காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பின், அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

    Advertisement

    தமிழகத்தில் அதிக வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் வகை பரவி வருவதாக கூறப்படுவதற்கு, எந்தவித ஆதாரமும் இல்லை. கடந்த ஆண்டுகளை விட தற்போது கொரோனா தொற்று குறைவாகவே உள்ளது.

    பொது சுகாதாரத் துறை, நோய் தடுப்பு மருந்து துறை தற்போதைய நிலையை கண்காணித்து தேவையான அனைத்து தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையற்ற அச்சமோ, பதற்றமோ வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    There is no evidence to suggest that a highly virulent strain of the coronavirus is spreading in Tamil Nadu. The State Government has stated that the incidence of coronavirus infection is currently lower than in previous years.