கட்டண உயர்வு வெறும் பரிசீலனைதான்! திருச்செந்தூர் பக்தர்களின் அச்சத்திற்கு அமைச்சர் ரமேஷ் விளக்கம்!

  • சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டணம் இதுவரை உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட சேவைகளுக்கு கட்டண உயர்வு பரிசீலிக்கப்பட்டு அது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து மட்டுமே கேட்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் ரமேஷ், பொதுமக்களின் முடிவுக்கு மாறாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ஜூன் 20ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயில் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் கட்டண சேவைகள், அபிஷேக சிறப்பு தரிசனக் கட்டணம் ஆகியவை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசியின்படி கணக்கிடப்பட்டு அப்போதைய நிலையில் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

    Advertisement

    தற்போது அதிகளவு உயர்ந்துள்ள விலைவாசி மற்றும் பண வீக்கத்தை கருத்தில் கொண்டும், இத்திருக்கோயிலுக்கு ஏற்பட்டு வரும் வருவாய்க் குறைவினை ஈடு செய்திடும் வகையிலும் நிர்வாக நலன் கருதியும், தக்கார் தீர்மானத்தின் அடிப்படையிலும் தற்போதுள்ள சேவை கட்டணங்கள் மற்றும் அபிஷேக சிறப்பு தரிசனக் கட்டண உயர்வு செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி தங்கத்தேர் இழுப்பதற்கு ரூ.2500ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்திடவும், சண்முகர் அர்ச்சனை செய்ய ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்திடவும், மூலவர் அபிஷேகம் ரூ.1500ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்திடவும், 9 கால பூஜை ரூ.1500ல் இருந்து ரூ.6,500 ஆக உயர்த்திடவும், அபிஷேக தரிசனக் கட்டணத்தை ரூ.500ல் இருந்து ரூ.2,500ஆக உயர்த்திடவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கட்டண உயர்வு குறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வரும் ஜூலை 7ம் தேதி மாலை 5.45 மணிக்குள் இணை ஆணையருக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இது திருச்செந்தூர் முருகன் கோயில் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

    அதன்படி அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டணம் இதுவரை உயர்த்தப்படவில்லை. திருச்செந்தூர் கோயிலில் 20க்கும் மேற்பட்ட சேவைகளுக்கு கட்டண உயர்வு பரிசீலிக்கப்பட்டு அதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் முடிவுக்கு மாறாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்

    English Summary

    'No Fee Hike Yet at Thiruchendur Murugan Temple': Minister Ramesh Clarifies Public Opinions are Only Being Reviewed