பைக்கில் பள்ளிக்கு வரும் மாணவர்களா நீங்க? உஷார்.. தமிழக பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!

  • சென்னை: இனி பள்ளி மாணவர்கள் பைக் ஓட்டிக்கொண்டு கெத்தாக பள்ளிக்கு வர ஆசைப்பட்டால், வீட்டிற்குத் திரும்பும்போது பைக் இல்லாமல், பெற்றோரின் திட்டுடன் தான் செல்ல வேண்டியிருக்கும். பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிரடியான புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

    Advertisement

    இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ். கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (CEO) அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு துறை கொடுத்த அழுத்தமான பரிந்துரையின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பிடிபட்டால் பைக் 'சீஸ்'

    இந்த புதிய உத்தரவின்படி, மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டார் வாகனங்களில் வந்தால், அந்த வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். அதன் பிறகு, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களைப் பள்ளிக்கு நேரில் வரவழைத்து, தக்க அறிவுரைகளை வழங்கி, அவர்களிடம் மட்டுமே வாகனம் ஒப்படைக்கப்படும்.

    பள்ளி வளாகத்திற்குள் மட்டுமல்லாது, பள்ளிக்கு வெளியேயும் கூட மாணவர்கள் பைக் ஓட்டிச் செல்வதைத் தடுக்க வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பள்ளிகளில் களமிறங்கும் 'ரோடு சேஃப்டி கிளப்'

    மாணவர்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வெறும் பேச்சோடு நிறுத்தாமல், அதைச் செயலில் கொண்டுவர பள்ளிகளில் 'சாலை பாதுகாப்பு மன்றம்' (Road Safety Club) கட்டாயமாக்கப்பட உள்ளது.

    Advertisement

    இந்த மன்றங்களுக்கு அந்தந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் தலைவராக இருந்து செயல்படுவார்கள். தினமும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த ஏதேனும் ஒரு முக்கியக் கருத்து மாணவர்களுடன் பகிரப்பட வேண்டும்.

    ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகங்கள் மற்றும் பேரணிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    டிராஃபிக் போலீஸாக மாறும் மாணவர்கள்

    மாணவர்களை நெறிப்படுத்த மற்றொரு சுவாரசியமான திட்டமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள என்.சி.சி), என்.எஸ்.எஸ், சாரணர் இயக்கம், மற்றும் இளஞ்செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, போக்குவரத்துத் காவல்துறை மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    Advertisement

    இவர்கள் சாலை விதிகளைக் கற்றுக்கொள்வதுடன், அவ்வப்போது பொது இடங்களில் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி, கல்வித் துறை இந்த 'நோ காம்ப்ரமைஸ்' முடிவை எடுத்துள்ளது. இனி மாணவர்கள் பைக் சாவியை வீட்டில் வைத்துவிட்டு, சைக்கிளிலோ அல்லது பொதுப் போக்குவரத்திலோ பள்ளிக்குக் கிளம்புவது தான் தீர்வு.

    English Summary

    From now on, if school students wish to arrive at school in style, riding their bikes, they will have to return home without their vehicles—and accompanied by a scolding from their parents. To curb the use of two-wheelers by school students, the Tamil Nadu School Education Department has issued a strict new order.