திமுக அறிவித்த திட்டங்களை வரிபிறழாமல் அப்படியே அறிவித்துள்ளனர் - முன்னாள் வேளாண் அமைச்சர் விமர்சனம்

  • சென்னை: "மாற்றம் என்று சொல்லி வந்தவர்கள் அளித்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது, வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை, திமுக ஆட்சியில் அறிவித்த அனைத்தும் வேளாண் பட்ஜெட்டில், பெயர் மாற்றம் செய்து வந்துள்ளது" என முன்னாள் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    வேளாண் கருவிகளை மானிய விலையில் வழங்க திட்டமிட்டு இருந்தோம், அதை அப்படியே இந்த அரசின் பட்ஜெட்டில் அறிவித்துவிட்டனர் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தவெக அரசின் முதலாவது வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில், திமுக அரசின் திட்டங்களை பெயர் மாற்றி தற்போது தவெக அரசு அறிவித்திருக்கிறது என திமுக விமர்சித்துள்ளது. மேலும், தவெக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அந்த திட்டம் குறித்து இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை.

    Advertisement

    திமுக ஆட்சியில் 77,000 விவசாயிகளுக்கு மானியத்துடன் இயந்திரங்கள் அளிக்கப்பட்டன. இந்த ஆட்சியில் அதன் மானியம் குறைக்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கர் பெயரில் ஆதி திராவிட விவசாயிகளுக்கு திமுக அறிவித்த மானிய திட்டத்தையே பெயரை மாற்றி அறிவித்துள்ளனர். திமுக அறிவித்த திட்டங்கள் வரிபிறழாமல் அப்படியே அறிவித்துள்ளனர். LABEL, STICKER ஆட்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன்.

    வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. வேளாண் பட்ஜெட்டில் பல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்துள்ளனர். தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டில் உழவர்களுக்கு ஏதும் புதிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி எதுவும் இல்லை. "மாற்றம், மாற்றம் என கூறி வந்தவர்கள், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. திமுக ஆட்சியின் திட்டங்களையே பெயர் மாற்றி புதியது போல அறிவித்துள்ளார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    “There are no new announcements in the agriculture budget, and everything included is merely a repackaging of schemes announced during the DMK regime,” criticized former Agriculture Minister MRK Panneerselvam.