சென்னை: தவெக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் என யாருமே பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை என கூறிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், ஊழல் செய்யும் எந்தவொரு தவெக நிர்வாகியும் பதவியில் தொடர முடியாது என்றார். மேலும், ஆதவ் அர்ஜுனாவிடம் பணம் இல்லை என அவர் சொல்வதை யாருமே நம்ப மறுப்பதாகவும் நகைச்சுவையாக பேசினார்.
மதுராந்தகம் இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் பிரச்சாரம் நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில், அதில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஆதவ் அர்ஜுனா, பணம் கொடுத்து தவெக வெல்ல தேவையில்லை என்றும் தன்னிடம் பல நூறு கோடி இருப்பதாக சொல்வதில் உண்மை இல்லை என்றும் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், "நாம் எல்லோரும் திமுக, அதிமுக பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னும் கொஞ்ச நாள் போனால் இந்த இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டில் கண்டிப்பாய் இருக்காது. தமிழ்நாட்டில் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற ஒரேயொரு கட்சி மட்டும்தான் இருக்கும். 234 தொகுதிகளிலும் விஜய் என்ற ஒரே முகத்தை காட்டி, அவருடைய சொல்லுக்கு கட்டுப்பட்டு 234 தொகுதிகளிலும் டெபாசிட் வாங்கிய ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம் மட்டும்தான். இங்கே திரண்டிருக்கும் இளைஞர்களும் தோழர்களும் 4 முதல் 5 மணி நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். எந்தவொரு கட்சியிலாவது தொண்டர்கள் 5 முதல் 6 மணி நேரம் ஒரே இடத்தில் இப்படி அமர்ந்திருப்பார்களா? அது தவெகவில் மட்டும்தான் சாத்தியம். விஜய் மீது நீங்கள் வைத்திருக்கும் பாசமும் அன்பும்தான் இதற்கு காரணம். நான் தி.நகர் தொகுதியில் வெறும் 4 நாட்கள் மட்டுமே சென்று வாக்கு சேகரித்தேன். என்னை சட்டமன்ற உறுப்பினராக்கி, இன்று அமைச்சராகவும் அமர வைத்திருக்கிறார் என்றால் அது நமது தமிழக முதலமைச்சரால் மட்டுமே சாத்தியம். அடுத்த வாரம் விஜய் உங்களை நேரில் சந்திக்க வருகிறார். அப்போது அந்த உற்சாகம் எப்படியிருக்கும் என்று பாருங்கள். நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி; ஒரு சிறிய தவறு செய்தீர்கள் என்றால் அடுத்த வினாடியே பதவியில் இருக்க மாட்டீர்கள் என்று கறாராக சொல்லக்கூடிய ஒரே தலைவர் விஜய் மட்டும்தான். பத்திரிகைகளில் எங்களைப்பற்றி என்னென்னவோ அவதூறுகளை எழுதிப் பார்த்தார்கள்; ஆனால் அவர்களால் எதையுமே நிரூபிக்க முடியவில்லை. முன்பெல்லாம் மாதம் மாதம் ரூ. 1,350 கோடி வரை கட்சி நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த நான்கு மாத ஆட்சியில் அந்த பணம் எங்கு போனது என்றே தெரியவில்லை. நாங்களும் அதை தேடி போகவில்லை; அதுவும் எங்களைத் தேடி வரவில்லை. அதில் ஒற்றை ரூபாய் வாங்கினாலும் நாங்கள் அமைச்சராகவோ, எம்எல்ஏவாகவோ இங்கு உட்கார்ந்திருக்க முடியாது. தவெகவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் விஜய்க்கு வெறும் ஊழியர்கள்தான். மக்களுக்கு சேவை செய்வது மட்டும்தான் எங்களின் ஒரே குறிக்கோள்" என்றார். அவர் மேலும் பைனல் பஞ்சாக, "எங்களுக்கு காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. மக்களாகிய உங்கள் வீட்டிற்கு வந்தால் காலையில் இட்லி, மதியம் ஒரு வேளை சாப்பாடு, இரவில் 2 தோசை சுட்டுக் கொடுத்தாலே போதும்.. எங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. அதனால் எங்களுக்கு சம்பாதிக்க வேண்டிய அவசியமே எங்களுக்குக் கிடையாது. இதோ இங்கே அமர்ந்திருக்கும் நம் சகோதரர் பொதுப்பணித்துறை அமைச்சர் (ஆதவ் அர்ஜுனா) பேசியபோது, 'என்கிட்ட பணமே இல்லை' என்று சொன்னார். ஆனால், அவர் சொன்னதை இங்கு யாருமே நம்ப மாட்டேங்கிறாங்களே! அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?" என்றார். அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் இதுபோல பேசியதும், அங்கு மேடையில் இருந்தவர்கள்.. பொதுமக்கள் என அனைவருமே வாய்விட்டு சிரித்தனர்.புஸ்ஸி ஆனந்த்
வெறும் 4 நாட்கள்
கட்சி நிதி
ஆதவ் அர்ஜுனா