சென்னை: தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை, மீறி இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் குறைந்த கட்டணத்தில் பைக்கில் பயணித்து வந்த நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பைக் டாக்ஸிக்கு அனுமதி அளிக்க வேண்டும். தற்போது அனுமதியின்றி இயங்கும் பைக் டாக்ஸி டிரைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரனையில் தமிழக அரசு, இந்த பதிலை அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் அனுமதியின்றி இயங்கும் பைக் டாக்சி டிரைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பைக் டாக்சிக்கு அனுமதி கொடுக்கலாமா? வேண்டாமா? என விரைவில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கூறியது. அப்போது தமிழக அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், பைக் டாக்சிக்கு அனுமதி வழங்குவது குறித்து குழு அமைத்தே முடிவு செய்ய முடியும். அதுவரை பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது. விதிகளை மீறி பைக் டாக்சிக்கு ஓட்டி வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை என்றால் அது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விளம்பரப்படுத்தலாம். ஏதேனும் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில், பைக் டாக்சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் சட்டம்தான் செல்லும். எனவே, தமிழக அரசு பைக் டாக்சிக்கு அனுமதி மறுக்க முடியாது என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு பைக் டாக்சி அனுமதி வழங்கும் விவகாரத்தில் ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு மீதான விசாரனையை ஒத்திவைத்தது. பைக் டேக்சிக்கு அனுமதி கிடையாது மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் வைத்து இருக்க கூடிய வாதம், ரேபிடோ உள்ளிட்ட செயலிகள் வாயிலாக பைக் டாக்சி ஓட்டி வருபவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது
மீறினால் அபராதம் விதிக்கப்படும்