சென்னை: "தவெக ஆட்சியில் மின்வெட்டே இல்லை என்று வாய் கூசாமல் பொய் சொன்ன அமைச்சர்களே.. இப்போது தொழிற்சாலைகளில் மின்சாரத்திற்குப் பதில் ஜெனரேட்டரைப் பயன்படுத்தச் சொல்லி நீங்களே அறிவித்திருக்கிறீர்களே, இதற்கு எப்படி முட்டுக்கொடுக்கப் போகிறீர்கள்?" என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தவெக அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டங்களிலேயே மின் வெட்டு ஏற்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தொழிற்சாலைகளில் இரவு, 7 மணி முதல், இரவு 1 மணி வரை, ஜெனரேட்டர் மின்சாரம் பயன்படுத்துமாறு மின்சாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தின், மதுரை துணை மையம் சார்பில், அனைத்து உயரழுத்த நுகர்வோர், மின் வாரிய மின்சார பயன்பாட்டை நிறுத்தி விட்டு, இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை, டீசல் ஜெனரேட்டரை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் சொந்தமாக ஜெனரேட்டர்களை இயக்கிக் கொள்ளுமாறு தொழில் நிறுவனங்களை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவுறுத்தி உள்ளதை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன. தவெக அரசின் மின் வாரியத்தின் அறிவுறுத்தலை திமுக விமர்சித்துள்ளது. திமுக ஐடி விங் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தவெக ஆட்சியில் மின்வெட்டே இல்லை என்று மைக்கை பார்க்கும் போதெல்லாம் வாய் கூசாமல் பொய் சொன்ன அமைச்சர்களே இப்போது தொழிற்சாலைகளில் மின்சாரத்திற்குப் பதில் ஜெனரேட்டரைப் பயன்படுத்தச் சொல்லி நீங்களே அறிவித்திருக்கிறீர்களே, இதற்கு எப்படி முட்டுக்கொடுக்கப் போகிறீர்கள்? ஆட்சி - பதவி என்றால் இன்ப சுற்றுலாபோல் அலைந்தால் மட்டும் போதுமா? ஆட்சி என்றால் நிர்வாகம் என்று ஒன்று இருக்கிறது என்று இரட்டை அர்த்தத்தில் வசனம் பேசி நடித்த நடிகர் விஜய்க்கு இது தெரியாதா? மின்வெட்டு விவகாரத்தில் வாய் திறந்தால் பொய், மடைமாற்று வேலை என்று சொல்லிக்கொண்டிருந்த உங்கள் நிர்வாக லட்சணம் இப்போது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது! தொழிற்சாலைகளில் ஜெனரேட்டரைப் பயன்படுத்தச் சொல்லி அவர்களின் தொழிலை ஒருபுறம் முடக்குவதுடன், விலைவாசியையும் இதனால் ஏற்றம் காண வைக்கப் போகிறீர்கள். இதுதான் நீங்கள் குதித்துச் சொன்ன மாற்றமா? நிர்வாகத் திறனற்ற இந்த கேடுகெட்ட மாற்றம் எதற்கு?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது.