சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகப்போகிறது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். தவெக அறிவித்த கொள்கைக்கும், அவர்களின் செயல்பாட்டிலும் மாறுபாடு உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு அதிகரித்து வருகிறது. மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். தவெக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது மின் தடை இல்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த ஒரு வாரமாக நமக்கு மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் காற்றின் அளவு குறையும். அதனால் காற்றாலை மின்சாரம் அளவு குறையும். கடந்த வருடம் இதே நேரத்தில் 16,000 மெகாவாட் மின்சாரம் பயன்பாடு இருந்தது. இப்போது 19,000 மெகாவாட் பயன்பாடாகிறது. 3,000 மெகாவாட் பயன்பாடு அதிகரித்தாலும் உற்பத்தி குறைந்துள்ளது.கடந்தவாரம் 2,500 மெகாவாட் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைக்கும் காற்றாலை மின்சார உற்பத்தி 1,500 மெகாவாட் குறைந்துள்ளது. கடந்த வாரம் 2,000 மெகாவாட் வெளியில் இருந்து கொள்முதல் செய்தோம். மேலும் 1,500 மெகாவாட் மின்சாரம் மார்க்கெட்டில் இருந்து கூடுதலாக வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியில் உள்ள பொதுத் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் வாங்க ஆலோசனை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்சாரத்தில் குறைந்த உற்பத்தியை வெளியில் வாங்கி சீர் செய்யவுள்ளோம். தட்டுப்பாடு இல்லாமல் சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த மூன்று நாட்களாக மின்சார விநியோகம் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பணியாளர்களை எடுப்பதற்கான நடவடிக்கையில் உள்ளோம். சில இடங்களில் சாதாரண காரணங்களால் பவர் பெயிலியர் ஆகியுள்ளது. மின்சார தட்டுப்பாடு, அவுட்டேஜ் போன்ற பிரச்சனைகள் ஏற்படவில்லை. அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துள்ளோம். முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் முழுவதும் சீரமைத்து வருகிறோம். கூடுதல் மின் நிலையங்கள் தொடங்குவதற்கான பணியை துரிதப்படுத்தியுள்ளோம். வரும் காலத்தில் நாம் நீண்ட காலத்துக்கான ஒப்பந்தம் போடுவதற்கான பணியை விரைவில் தொடங்குவோம். கடந்த காலங்களை விட வெப்பம் அதிகமாக உள்ளது. அதனால் வழக்கத்தை விட கூடுதலான மின்சாரம் தேவைப்பட்டது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் பிரச்சனை நிலவுகிறது. அந்தந்த மார்க்கெட் ரேட்டுக்கு தான் கொள்முதல் செய்துள்ளோம். மற்ற மாநிலங்கள் வாங்கிய அதே விலையில் தான் வாங்கியுள்ளோம். நீண்ட கால ஒப்பந்தம் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு. குறுகிய கால ஒப்பந்தம் அதிக செலவு வைக்கும். அதை நிறுத்தி நீண்ட கால ஒப்பந்தத்துக்கான கொள்கைகளை வகுத்து வருகிறோம். வருகிற 1 ஆம் தேதியில் இருந்து ஒப்பந்தம் ஏற்படும். மக்களுக்கு சிரமம் ஏற்பட கூடாது என்பதற்காக மார்க்கெட்டில் வாங்குகிறோம் " என்றார்.