தமிழக மின்துறைக்கு ரூ 2.47 லட்சம் கோடி கடன்! மின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? நிர்மல்குமார் பதில் என்ன?


  • சென்னை: இந்த ஆண்டு மின்கட்டணம் உயர்த்தப்படாது என வெள்ளை அறிக்கையில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்துள்ளார். அது போல் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாடு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் (தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB / TANGEDCO) நிதி நிலை மற்றும் செலவினங்கள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை சென்னை மின்வாரிய தலைமையகத்தில் இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டுப் பேசினார்.

    Advertisement

    அவர் கூறுகையில் "தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிலைமை மற்றும் கடந்த 25 ஆண்டு கால செலவினங்கள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை இன்று நாம் வெளியிட்டிருக்கிறோம். இதில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் நடப்பு 2026-ஆம் ஆண்டு வரையிலான 21 ஆண்டுகால கணக்குகள் மிகத் துல்லியமாக பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. தற்போதைய சூழலில் மின்சார வாரியத்திற்கு மட்டும் ஒட்டுமொத்தமாக ரூ. 2,47,130 கோடி கடன் நிலுவையில் உள்ளது. குறிப்பாக, கடந்த 2021 முதல் 2026 வரையிலான கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் மின்வாரியத்தின் ஒட்டுமொத்த செலவு 5.32 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால், அதே காலகட்டத்தில் மின்வாரியத்திற்கு கிடைத்த வருமானமோ 4.97 லட்சம் கோடி ரூபாய் மட்டும்தான். இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ. 34,447 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டான 2025-2026-ல் மட்டுமே கூடுதலாக ரூ. 6,492 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கடந்த காலங்களில் மின்கட்டணம் உயர்த்தப்படும் போதெல்லாம், அதற்கு இணையாக மின்வாரியத்தின் செலவினங்களும் திட்டமிட்டு உயர்த்தப்பட்டுள்ளது. செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்ததே தவிர, மின்சார உள்கட்டமைப்புகள் எங்குமே பலப்படுத்தப்படவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 343 பேர் மட்டுமே புதிதாக வேலைக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர்; புதிய பணியாளர் தேர்வுகளும் முறையாக நடத்தப்படவில்லை. இதன் காரணமாகவே தற்போது மின் வாரியத்தில் 65,921 காலிப்பணியிடங்கள் நிலவுகின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 16,782 பேர் பணி ஓய்வு பெற உள்ளனர்.

    தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 4,47,603 மின்மாற்றிகள் (Transformers) பயன்பாட்டில் உள்ளன. இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், காலாவதியான 42,808 மின்மாற்றிகள் 25 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் பயன்பாட்டில் நீடிக்கின்றன. விதிமுறைப்படி 25 ஆண்டுகள் கடந்த மின்மாற்றிகளை இனி பயன்படுத்தவே முடியாது. அதேபோல், மாநிலத்தில் உள்ள துணை மின் நிலையங்களைப் புதுப்பிக்கவும், சீரமைக்கவும் மட்டுமே தற்போது உடனடியாக ரூ. 8,318 கோடி தேவைப்படுகிறது. கடந்த ஆட்சியில் மின்சாரத் துறையில் எவ்வித உள்கட்டமைப்பு முன்னேற்றமும் செய்யாமல், தனியாரை உள்ளே நுழைத்தது தங்களின் சொந்த லாபத்திற்காக மட்டுமே.

    Advertisement

    மின்சார வாரியத்தில் குறுகிய கால ஒப்பந்தங்கள் (Short-term Contracts) மூலம் மிக அதிக விலைக்குத் தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நமது அரசு, அந்த நடைமுறையை மாற்றி நீண்ட கால ஒப்பந்தங்களாக (Long-term Contracts) மாற்றுவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் மூலம் மின் கொள்முதல் விலை பெருமளவு குறைக்கப்பட்டு, மின்சார வாரியத்திற்கு மாதம் 215 கோடி ரூபாய் வரை சேமிக்கப்படும். மின்சார வாரியத்தின் இந்தச் செலவுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்ந்து ஏன் அதிகரித்தது என்பது குறித்து அரசு சார்பில் விரிவான விசாரணை நடத்தப்படும்.

    Advertisement

    மேலும் மின் பற்றாக்குறையால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. தமிழக மின்துறைக்கு ரூ 2.47 லட்சம் கோடி கடன் உள்ளது. எனினும் இந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்படாது. அது போல் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டமும் தொடரும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Electricity Minister Nirmal Kumar announced in the white paper that there will be no electricity tariff hike this year and also clarified concerns regarding the continuation of the free power scheme.