உதயநிதியின் திருத்தத்திற்கு.. ஆதரவு இல்லை! சட்டமன்றத்தில் நடந்தது என்ன? உடைத்து பேசிய பெ.சண்முகம்!

  • சென்னை: சட்டமன்ற முதல் நாள் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம், எதிரக்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் திருத்தம் சேர்க்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த திருத்தத்திற்கு ஆதரவு இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையாக அறிவித்திருக்கிறது.

    Advertisement

    இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது, "காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

    Advertisement

    தமிழக அரசின் தீர்மானம்

    வழக்கமாக இப்படி தீர்மானம் கொண்டுவரப்படுகிறது எனில், முன்கூட்டியே இந்த தீர்மானம் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு, அதன் மீது சட்டப்பேரவை தலைவர்கள் பேசிய பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை அரசு கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் "நான் ஒரு திருத்தம் கொண்டு வந்தேன். அதைப்பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லை" எனறு கேள்வி எழுப்பியிருந்தார்.

    உதயநிதியின் திருத்தம்

    முதலமைச்சரும் இந்த திருத்தத்தை ஏற்றுக்கொண்டு தீர்மானத்தை நிறைவேற்ற சொல்லிவிட்டார். பிரச்சனை என்னவெனில், உதயநிதி ஸ்டாலின் கொடுத்த திருத்தம் என்ன என்பது, சபையில் இருந்த எம்எல்ஏக்கள் யாருக்கும் தெரியாது. தீர்மானம் மீது பேசிய சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கும் இது தெரியாது. என்ன திருத்தம் என்பது தெரியாமல் நாங்கள் எப்படி கையை உயர்த்த முடியும்? இருப்பினும் அரசு மீது நம்பிக்கை வைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துவிட்டார்கள்.

    Advertisement

    தவெகவின் தவறு

    ஆனால், இடையில் கொடுக்கப்பட்ட திருத்தம் என்ன? என்பதை தெரிவிக்காமல் அதை ஏற்று தீர்மானத்தை நிறைவேற்றுகிற அணுகுமுறை என்பது தமிழக சட்டமன்ற விதிகளுக்கு புறம்பானது. விதிகள் பற்றி முதல்வருக்கு தெரியவில்லை எனில் சபாநாயகர் சொல்லியிருக்க வேண்டும். அதேபோல தவெகவில் அனுபவமிக்க எம்எல்ஏக்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களாவது சொல்லியிருக்க வேண்டும். எதையும் சொல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது என்பது மிக தவறு.

    வெடித்த பிரச்சனை

    எனவே நாளை சட்டமன்றம் தொடங்கியவுடன் இந்த திருத்தம் குறித்து மீண்டும் விவாதம் நடத்தப்பட வேண்டும். உதயநிதி ஸ்டாலின் கொடுத்த திருத்தம் என்ன என்பது குறித்து இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Advertisement

    அதாவது கடந்த மார்ச் மாதம், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், அணை கட்டுவது குறித்து புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    மு.க.ஸ்டாலினின் கடிதம்

    பிரச்சனை என்னவெனில் இப்படி ஒரு கடிதம் எழுதப்பட்டது யாருக்கும் தெரியாது. அதே மார்ச் மாதம், மு.க.ஸ்டாலின் தலைமையில் அணை குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிய நடுவர் மன்றம் குறித்து ஸ்டாலின் எதையும் பேசவில்லை. ஆனால், கடிதம் மட்டும் எழுதப்பட்டிருக்கிறது.

    மட்டுமல்லாது கடந்த 2018ம் ஆண்டு அணை கட்டுவது குறித்து உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை கொடுத்திருக்கிறது. அதில், காவிரியை நம்பி இருக்கும் மாநிலத்தின் அனுமதியின்றி அணை கட்ட கூடாது என்று தெரிவித்திருக்கிறது. இந்த தீர்ப்பு 2033 வரை செல்லும். இப்படி இருக்கும்போது புதிய நடுவர் மன்றம் கோருவது, தீர்ப்பை நீர்த்துப்போக செய்யும் செயல்.

    Advertisement

    வெளிச்சத்திற்கு வந்த கடிதம்

    இந்த கடிதம் தற்போது உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த திருத்தத்தின் போதுதான் வெளியில் தெரிய வந்திருக்கிறது. திருத்தத்தின் விளைவுகளை தெரிந்துக்கொள்ளாமல் விஜய்யும் தீர்மானத்தில் இந்த திருத்தத்தை சேர்த்து நிறைவேற்றியிருக்கிறார்.

    நீங்கள் (விஜய்) அரசியலுக்கு புதியவர். அரசியல் அனுபவம் இல்லாதவர். இதை நாங்கள் புரிந்கொள்கிறோம். ஆனால், அதேநேரம் உங்களுக்கு நிதானம் தேவை. எதிர்க்கட்சி தலைவர் என்ன திருத்தம் கொண்டு வந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதா? அப்படி என்ன அவசரம்? தீர்மானம் இன்று நிறைவேறவில்லை எனில், நாளை நிறைவேறப்போகிறது. ஆனால், அவசரம் காட்டினால் தமிழகத்தின் நலனில் நீண்ட காலம் பாதிப்பை ஏற்படுத்தும விளைவுகள் உண்டாகும்.

    Advertisement

    உதயநிதியின் திருத்தத்திற்கு ஆதரவு கிடையாது

    எனவே இந்த பிரச்சனையை சுமூகமாக முடிக்க, நாளை அவை கூடும்போது எதிர்க்கட்சி தலைவர் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்கவில்லை என்று அறிவிக்க வேண்டும். அரசின் தீர்மானத்திற்கு மட்டும்தான் எங்களின் முழுமையான ஆதரவு இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த திருத்தத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை" என்று கூறியிருக்கிறார்.

    தமிழக அரசியலில் சலசலப்பு

    பெ.சண்முகம் கூறியிருக்கும் விஷயம் தமிழக அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பக்கம் நீண்டக கால கூட்டணியில் இருந்து வெளியேறிய உடன், உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த திருத்தத்திற்கு ஆதரவு இல்லையா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. இன்னொரு பக்கம், திமுக கொடுத்த இந்த திருத்தம் உண்மையிலேயே தமிழகத்தின் நலனை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.

    English Summary

    No Support for Udhayanidhi's Amendment: On the first day of the Legislative Assembly session, a resolution opposing the Mekedatu dam—moved by Chief Minister Vijay—was passed after incorporating an amendment proposed by Leader of the Opposition Udhayanidhi Stalin. Meanwhile, the Communist Party of India (Marxist) has openly declared that it does not support the amendment moved by Udhayanidhi Stalin.