பரந்தூருக்கு ‘நோ’... மேட்டூருக்கு பிரைவேட் ஜெட்.. முதல்வர் விஜய்யின் டபுள் ஸ்டாண்ட்!

  • சென்னை: மேட்டூர் அணை மதகுகளைத் திறந்து மலர் தூவும் சில நிமிட நிகழ்விற்காக, முதல்வர் விஜய் தனி விமானம் மூலம் பயணம் மேற்கொண்டதும், அதற்காகச் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் ஆடம்பரப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளன.

    Advertisement

    சில தினங்களுக்கு முன்புதான் சென்னையின் அடுத்த தலைமுறை உட்கட்டமைப்புத் தேவையாகப் பார்க்கப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை விவசாய நிலங்கள் அழியும் எனக் கூறி கைவிடுவதாக அறிவித்தார் முதல்வர். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே விவசாயிகளைச் சந்திக்க அவரே தனி விமானத்தில் பறந்திருப்பது கடுமையான முரண்பாட்டு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

    Advertisement

    அரை நாள் பயணத்துக்கு தனி விமானமா?

    வழக்கமாக முதல்வரின் கான்வாய் சாலை மார்க்கமாகவோ அல்லது அரசு ஹெலிகாப்டர் மூலமாகவோ செல்லக்கூடிய சேலம் / மேட்டூர் பயணத்திற்கு, தனி சொகுசு விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. காலை சென்று மதியத்திற்குள் சென்னை திரும்பும் மிகக் குறுகிய கால அரசு முறைப் பயணத்திற்கு இந்த அளவுக்குத் தனி விமானப் பயன்பாடு அவசியமா என்ற கேள்விகள் எழுகின்றன. சாலையில் சென்றால் பல மாவட்ட மக்களை சந்திக்க முடியும். மக்கள் குறைகளை கேட்க முடியும். தமிழ்நாட்டின் நிலையையும் அறிய முடியும்.

    ஒருபுறம் சாமானியர்களின் முதல்வர், விவசாயிகளின் காவலர் என்ற பிம்பத்தைக் கட்டமைக்கும் சூழலில், மறுபுறம் கார்ப்பரேட் தலைவர்களுக்கு இணையாக தனி ஜெட் விமானத்தில் பறப்பது அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகளுக்குக் கையில் கிடைத்த ஆயுதமாக மாறியுள்ளது.

    Advertisement

    பரந்தூர் ரத்து பின்னணியும் எழும் முரண்களும்

    சென்னையின் தற்போதைய மீனம்பாக்கம் விமான நிலையம் தனது உச்சக்கட்டப் பயன்பாட்டுக் கொள்ளளவை எட்டிவிட்ட நிலையில், சர்வதேச முதலீடுகளையும் சரக்கு போக்குவரத்தையும் ஈர்க்க 2-வது சர்வதேச விமான நிலையம் அவசியம் என்ற விவாதம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. ஆனால், 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்த பரந்தூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, "விவசாய நிலங்களையும் நீர்நிலைகளையும் காப்போம்" என்ற முழக்கத்தோடு பரந்தூர் திட்டத்தை சட்டப்பேரவையில் கைவிடுவதாக அறிவித்தார் முதல்வர் விஜய்.

    சர்வதேச ஏவியேஷன் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்குத் தேவையான ஒரு விமான நிலைய உள்கட்டமைப்புத் திட்டத்தைக் கைவிட்ட முதலமைச்சர், தனது பயணங்களுக்கு விமானங்களையும் தனி ஜெட்களையும் முதன்மைப் போக்குவரத்து தேர்வாக வைத்திருப்பது ஏன்?

    Advertisement

    உள்கட்டமைப்பு விரிவாக்கம் இல்லாமல் எதிர்காலப் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சி எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியை தொழில்துறை நிபுணர்கள் எழுப்பி வருகின்றனர்.

    ஆடம்பர செலவுகளும் கொதிக்கும் டெல்டாவும்

    போதிய நீர்வரத்து இல்லாததால் குறுவை சாகுபடி முழுமையாகப் பொய்த்துப்போய், செப்டம்பர் மாதத்தில் சம்பா சாகுபடிக்காக மட்டுமே மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. பல லட்சம் ஏக்கர் விவசாய இழப்பைச் சந்தித்து தவிக்கும் டெல்டா விவசாயிகளின் வேதனையைத் துடைக்க வேண்டிய அரசு, 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்கும், பல கோடி ரூபாய் மதிப்பிலான இரும்பு பேரிகார்டுகளுக்கும் நிதி விரயம் செய்வதாக விமர்சனங்கள் வலுக்கின்றன.

    Advertisement

    விவசாயிகளின் பெயரால் பரந்தூர் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதே விவசாயிகளின் வாழ்வாதாரமான மேட்டூர் திறப்புக்கு தனி ஜெட்டில் பறந்து வந்து சில நிமிடங்களில் திரும்பிச் செல்லும் இந்த பாணி, கொள்கை முரணா அல்லது அதிகார அலட்சியமா என்ற விவாதம் தமிழ்நாடு அரசியல் களத்தில் தீவிரமடைந்துள்ளது.

    English Summary

    No to Parandur, Private Jet to Mettur: The double stand in CM Vijay's Politics