நாளை கடைகளில் யுபிஐ பரிவர்த்தனை கிடையாது.. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு

  • சென்னை: அக்டோபர் 2ம் தேதியான நாளை காந்தி ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் பிறந்த நாள், லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள், காமராஜர் நினைவு நாள் என மூன்றும் ஒரே நாளில் வருகிறது. காந்தி பிறந்த நாளான, நாளை கடைகளில் யுபிஐ பரிவர்த்தனை நிறுத்தப்படும்' என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் எஸ்.சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் எஸ்.சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை: வணிகர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் வணிகர் விரோதப் போக்கை கண்டித்து, அக்.7-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இப்பேரவை அறிவித்துள்ளது.

    Advertisement

    அகில இந்திய வியாபாரிகள் சங்க கோரிக்கையைத் தொடர்ந்து, அந்த போராட்டத்துக்கு முன்னோட்டமாகவும், வணிகர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பை மத்திய அரசுக்கு அறவழியில் உணர்த்தும் வகையிலும் இப்பேரவை முக்கிய முடிவை எடுத்துள்ளது.

    அந்நியப் பொருட்களையும், அநீதியான வரிகளையும் எதிர்த்து அறவழியில் போராடிய தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்.2-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் அனைவரும், தங்கள் கடைகளில் உள்ள அனைத்து வகையான யுபிஐ, கியூஆர் கோடு பணப் பரிவர்த்தனைகளையும் ஒருநாள் முழுவதும் நிறுத்தி, ரொக்கப் பண பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ளவேண்டும். இதுதொடர்பாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    வரும் அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக ரீதியான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை எம்பிஆர் கட்டணம் வணிகர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விரிவாக சொல்ல வேண்டும் என்றால், சாதாரண தனிநபர் மற்றும் இன்னொரு தனிநபர்களுக்கிடையேயான (P2P) பரிவர்த்தனைகளுக்கு எப்போதும் போலக் கட்டணம் கிடையாது. ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் அதிகபட்சமாக ரூ.300 என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள், விவசாய இடுபொருட்கள் போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு ரூ.2,000க்கு மேல் செலுத்தப்படும் பரிவர்த்தனைகளில் ரூ.5 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூலதன சந்தை தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு 0.02% கட்டணம் விதிக்கப்பட உள்ளது. அதேநேரம் இந்த MDR என்பது வரி கிடையாது, அரசு கட்டணமும் கிடையாது. இந்த பணம் அரசுக்கு செல்லாது. யுபிஐ பரிவர்த்தனையை செயல்படுத்தும் வங்கிகள் உள்ளிட்ட கட்டண அமைப்பில் ஏற்படும் செலவுகளை ஈடுகட்டுவதற்காக இந்த தொகை வசூலிக்கப்படுகிறது.

    Advertisement

    எனினும் ரூ.2,000-க்கு மேற்பட்ட வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு வணிகர்கள் மட்டுமே இக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும்; வாடிக்கையாளர்கள் மீது இதைச் சுமத்தக் கூடாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதேநேரம் ரூ.2,000-க்கு உட்பட்ட பரிவர்த்தனைகள் மற்றும் மாதம் ரூ.1 லட்சம் வரை யுபிஐயில் பெறும் சிறு வணிகர்களுக்கு இந்த கட்டணம் கிடையாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    ஆனால் மத்திய அரசு இந்த திட்டத்தை எந்த காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது என அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . இந்த விவகாரத்தில் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேநேரத்தில் இந்தக் கட்டணம் எந்த சட்ட அடிப்படையில் விதிக்கப்பட்டது.. 0.4% என்பது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என்பது விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    English Summary

    S. Soundararajan, President of the Federation of Tamil Nadu Traders Associations, has stated that UPI transactions at shops will be suspended tomorrow, the day of Gandhi's birth anniversary.