நீதிபதிகள் புனித பசுக்கள் இல்லை.. நீதித்துறையில் ஊழல் இல்லைனு சொல்ல முடியாது – சென்னை ஹைகோர்ட்

  • சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படத்தில் நீதித்துறையில் ஊழல் உள்ளதாக இடம்பெற்றுள்ள காட்சியால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், லட்சுமி நாராயணா அமர்வு அதிரடியாக தள்ளுபடி செய்தது.

    Advertisement

    இந்தவேளையில் 'கருப்பு' திரைப்படத்தை நான் பார்த்துவிட்டேன். என்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கூறியதோடு, '' ''நீதித்துறையில் ஊழல் இருப்பதை யாரும் மறுக்க முடியாது'' என்று கூறியதோடு படத்தை தடைக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

    Advertisement

    நடிகர் சூர்யா, நடிகை திரிஷா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'கருப்பு'. இந்த திரைப்படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி உள்ளார். 'ட்ரீம் வாரியர்ஸ்' என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பல்வேறு தடங்கல்களை தாண்டி இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுக்கு இந்த திரைப்படம் 'ஹிட்' படமாக அமைந்துள்ளது. இதனால் சூர்யா மற்றும் அவரது ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர். இந்நிலையில் தான் 'கருப்பு' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறி வழக்கறிஞர் ஆர்எஸ் தமிழவேந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    Advertisement

    அதில், 'கருப்பு' திரைப்படத்தில் நீதிமன்றங்கள் அவமதிக்கப்ட்டுள்ளது. களங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நீதிமன்றத்தின் தலைமை குற்றவியல் நீதிபதி ஊழல்வாதியாக காட்டப்பட்டு இருக்கிறது. இதனால் திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு, தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை, மத்திய திரைப்படச் சான்றளிப்பு வாரியம் (CBFC) ஆகியவற்றை, 'கருப்பு' படத்தை திரையரங்குகளிலும், ஓடிடி தளங்களிலும் தடை செய்யவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனு கோரியிருந்தது. '' என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், வி லட்சுமி நாராயணா அமர்வில் விசாரிக்கப்பட்டு அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது: ''நீதித்துறையில் ஊழல் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஊழல் நீதிபதிகள் இருந்தனர், இப்போதும் இருக்கின்றனர். நீதிமன்றங்களும், நீதிபதிகளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. நீதிபதிகள் புனித பசுக்கள் அல்ல. நீதி என்பது மறைக்கப்பட்ட அறம் அல்ல. அது சாதாரண மனிதர்களின் மதிப்பிற்குரிய, வெளிப்படையான விமர்சனங்களுக்கு உட்பட அனுமதிக்கப்பட வேண்டும்.

    Advertisement

    முன்னாள் இந்திய தலைமை நீதிபதி எஸ்.பி. பரூச்சா கேரளாவின் கொல்லத்தில் நடந்த ஒரு சட்ட மாநாட்டில், நாட்டின் நீதிபதிகளில் 20 சதவீதம் பேர் ஊழல்வாதிகள் என்று கருத்து தெரிவித்த்தார். ஆனால் நாங்கள் அவ்வளவு தூரம் செல்லமாட்டோம். நீதித்துறை ஊழல் சம்பவங்களை நாங்கள் அறிவோம். சந்தித்திருக்கிறோம்.

    திரைப்படத்தில் நீதிமன்றம் தொடர்பான காட்சியின் சித்தரிப்பு மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மை தான். ஆனால் உண்மையில் தமிழ்த் திரைப்படங்கள் இவ்வாறே எடுக்கப்படுகின்றன. ஒரு ஹீரோ தன்னைச் சூழ்ந்திருக்கும் டஜன் கணக்கான வில்லன்களை தனியாளாக வீழ்த்துவார். தமிழ்ச் சினிமாவில் அனைத்தும் நாடகத்தன்மை நிறைந்தவை. எனவே, 'கருப்பு' படத்தையும் அவ்வாறே கருத வேண்டும்.

    Advertisement

    ஒரு கலைஞர் தனது கதையை தனது சொந்த வழியில் படைக்க உரிமை உண்டு. கலை சுதந்திரம் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட வேண்டும். நீதிபதிகளை புனிதமானவர்களாகக் கருதத் தேவையில்லை. நீதி என்பது மறைக்கப்பட்ட அறம் அல்ல. அது விமர்சனங்களுக்கு உட்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம்.

    மேலும் மத்திய திரைப்படச் சான்றளிப்பு வாரியம் ஒரு திரைப்படத்திற்கு அனுமதி அளித்துவிட்டால், நீதிமன்றம் தனது சொந்த கருத்தை கூறி பொதுநல வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது. மேலும் திரைப்படத்தில் காட்டியது போல் 'செவன் வெல்ஸ் நீதிமன்றம்' என்று எந்த நீதிமன்றமும் இல்லை. ஆர்கே நாராயணனின் படைப்புகளில் 'மால்குடி' ஒரு கற்பனை கிராமம் போலவே, இதுவும் ஒரு கற்பனை நீதிமன்றம். ஒரு கற்பனை நீதிமன்றத்தின் தலைமைக் குற்றவியல் நடுவர் ஊழல்வாதியாக சித்தரிக்கப்பட்டால், அது நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971-இல் உள்ள penal பிரிவுகளில் வராது. மேலும் இயக்குநர் முழு நீதி அமைப்பையும் ஊழல்வாதியாக சித்தரிக்கவில்லை.

    Advertisement

    மேலும் இந்த விசாரணையின்போது நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், ''இந்த திரைப்படத்தை நான் பார்த்துவிட்டேன். 'செவன் வெல்ஸ் நீதிமன்றத்தில்' நேர்மையற்ற வழக்கறிஞருக்கும், ஊழல் நீதிபதிக்கும் இடையேயான புனிததன்மையற்ற கூட்டணி தான் படத்தின் கருப்பொருள். இப்படியான சித்தரிப்பு காட்சிகள் ஒரு திரைப்படத்டை தடை செய்ய காரணமாக அமைய முடியாது'' என்று கூறினார்.

    English Summary

    The Chennai High Court maintained that the film Karuppu may be shown, recognising artistic freedom while acknowledging corruption concerns within the judiciary. The ruling clarifies that depictions do not justify bans and situates creative expression within legal and constitutional rights, referencing precedents on speech and cinema.