காஞ்சிபுரத்திற்கு 13 அல்ல.. தினமும் 40 மின்சார ரயில்கள்.. செங்கல்பட்டு- அரக்கோணம் பாதை மாறுது

  • சென்னை: சென்னையின் புறநகராக தொடங்கும் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் வழியாக அரக்கோணம் வரை 68 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரட்டை ரயில்பாதை அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.993 கோடி செலவாகும் என ரயில்வே அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. இரட்டை வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்தால், தினமும் 13 ரயில்கள் இயக்கும் இடத்தில் 40 ரயில்கள் வரை காஞ்சிபுரத்திற்கு விரிவுபடுத்த முடியும். பயணிகள் ரெயில் மட்டுமின்றி சரக்கு ரயில்களும் கூடுதலாக இயக்க முடியும்.

    Advertisement

    சென்னை ரயில்வே கோட்டத்தில் செங்கல்பட்டு, அரககோணம் வழித்தடம் முக்கியமான ரயில்வே இணைப்பு வழித்தடமாக உள்ளது. செங்கல்பட்டு வரை ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் செங்கல்பட்டு - காஞ்சிபுரம்-அரக்கோணம் வழித்தடத்தில் ஏராளமான பயணிகள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே ஒரு வழித்தடம் மட்டுமே இருப்பதால் காஞ்சிபுரம் பயணிகள் இன்று வரை அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, 2-வது ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    Advertisement

    இதனைத்தொடர்ந்து ஒரு வழிப்பாதையை, இரட்டை வழிப்பாதையாக மாற்றுவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. ஆரம்பத்தில் இந்த திட்டத்திற்காக சுமார் ரூ.1,538 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிட்டது. அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டங்களும் நடத்தப்பட்டு, வெற்றிகரமாக முடிவடைந்தன.

    இதனைத்தொடர்ந்து, திட்டப்பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கக்கோரி, சாத்திய கூறுகள் ஆய்வுவறிக்கை ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரெயில்வே அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். ரயில்வே வாரியத்தில் அனுமதிக்காக காத்திருந்தனர்.

    இந்தநிலையில், அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே ரூ.993 கோடி செலவில் 68 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரட்டை வழித்தடம் அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 'அரக்கோணம் - செங்கல்பட்டு இடையேயான இந்த இரட்டை வழித்தடத்திட்டமானது, சென்னை புறநகர் ரெயில் கட்டமைப்பில் உள்ள பயணிகள் நெரிசலை குறைப்பதற்கும், நேரம் தவறாமை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த வழித்தடம், பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை வலுப்படுத்தும். சிமெண்ட், வாகன உதிரிபாகங்கள், உணவு தானியங்கள், இரும்பு உள்ளிட்ட முக்கியப்பொருட்களின் சரக்குப் போக்குவரத்திற்கும் பயனளிக்கும்' என்றார்.

    Advertisement

    மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சொன்னது போலவே செங்கல்பட்டு அரக்கோணம் வழித்தடம் என்பது சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கியமான வழித்தடம் ஆகும். இதன் மூலம் ரயில்கள் காத்திருப்பு நேரம் குறையும். மகேந்திரா வேர்ல்டு சிட்டி, மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை மற்றும் வாகன உதிரிபாகங்கள், சிமெண்ட் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருளாதாரம் மற்றும் தொழில்துறை மையங்களை இணைக்கும்.

    காஞ்சீபுரம் அருகே பரிந்துரைக்கப்பட்டுள்ள பரந்தூர் விமான நிலையத் திட்டம் செல்கிறது. இந்த வழித்தடம் அமைக்கப்பட்டால் பயணிகளுக்கு பயனுள்ளதாக மாறும். . புறநகர் மற்றும் சரக்குப் போக்குவரத்தை வலுப்படுத்த முடியும். அதேபோல் செங்கல்பட்டு- அரக்கோணம் இரட்டை வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்தால், தினமும் காஞ்சிபுரத்திற்கு 13 ரயில்கள் இயக்கும் இடத்தில் 40 ரயில்கள் வரை விரிவுபடுத்த முடியும். பயணிகள் ரயில் மட்டுமின்றி சரக்கு ரெயில்களும் கூடுதலாக இயக்க முடியும்.

    Advertisement

    தற்போது காஞ்சிபுரம் தடத்தில் ஒற்றை ரயில் பாதை இருப்பதால், பாலூர், வாலாஜாபாத், காஞ்சீபுரம் போன்ற ரெயில் நிலையங்களில் எதிரே வரும் ரயிலுக்காக நீண்ட நேரம் ரயில்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த தாமதம் குறையும். இரட்டை வழித்தடம் பணிகளோடு சேர்த்து, இந்த தடத்தில் உள்ள அனைத்து முக்கிய ரெயில் நிலையங்களும் நன்மையாக்கப்பட்டு, புதிய நடைமேடைகள் மற்றும் பயணிகளுக்கான தங்கும் அறைகள் போன்ற மேம்பட்ட வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் சுற்றியுள்ள பகுதி மக்களின் பல ஆண்டுகால கனவு நனவாகப் போகிறது.

    English Summary

    Once the 68-kilometer-long double railway line—extending from Chengalpattu (which serves as a suburb of Chennai) through Kanchipuram up to Arakkonam—becomes operational, the number of trains extended to Kanchipuram could be increased to 40 per day, up from the current daily operation of 13 trains. In addition to passenger trains, additional freight trains could also be operated.