சென்னை: சென்னையில் 'ஹைக்கூ முற்றம்' அமைப்பின் 15-வது இலக்கியக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரபல திரைப்பட இயக்குநரும், கவிஞருமான பிருந்தா சாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கவிதை நூலை வெளியிட்டார்.
விழாவில் கவிஞர் கௌரி சங்கர் எழுதிய 'யானையின் சாயலில் பனை' என்ற ஹைக்கூ கவிதைத் தொகுப்பை, கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் வெளியிட, பிருந்தா சாரதி பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பிருந்தா சாரதி, இன்றைய சூழலில் இளைஞர்கள் மத்தியில் ஹைக்கூ கவிதைகள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருவதாகத் தெரிவித்தார். "மகாகவி பாரதியார் மூலமாக ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் தமிழ் இலக்கியத்திற்குள் வந்தன. ஆரம்பத்தில் புதுக்கவிதைகள் எழுதிய நான், கவிக்கோ அப்துல்ரகுமான் மற்றும் அறிவுமதி ஆகியோரின் படைப்புகளைப் படித்துவிட்டு ஹைக்கூ எழுதத் தொடங்கினேன். எனது 'மீன்கள் உறங்கும் குளம்' ஹைக்கூ நூல் பல்வேறு விருதுகளைப் பெற்றது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், புதிய கவிஞர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை வைத்தார்: "மூன்று வரிகளில் எழுதிவிட்டாலே அது ஹைக்கூ ஆகிவிடாது. இயற்கை மீதான அன்பு, சமூகப் பார்வை, ஆழமான சிந்தனை ஆகியவையே உண்மையான ஹைக்கூவின் அடையாளம். இன்றைக்கு இளம் கவிஞர்களை ஈர்க்கும் ஒரு புதிய அலையாக ஹைக்கூ மாறியுள்ளது. எனவே, எது உண்மையான ஹைக்கூ என்பதை இளம் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்கும் ஒரு சிறந்த களமாக 'ஹைக்கூ முற்றம்' செயல்பட வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு கவிஞர் சாந்தி சரவணன் தலைமை தாங்கினார். கவிஞர் மு.முருகேஷ் வரவேற்புரை ஆற்றினார். நூலை ஆய்வு செய்து முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி உரையாற்றினார். நூலாசிரியர் கௌரி சங்கர் ஏற்புரை வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், 'ஹைக்கூ முற்றம்' அமைப்பின் 12-வது மின்னிதழைப் பேராசிரியர் இராம.குருநாதன் வெளியிட, 'பொதிகை மின்னல்' ஆசிரியர் வசீகரன் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற கவியரங்கில் பல்வேறு கவிஞர்கள் கலந்துகொண்டு தங்களின் சிறந்த ஹைக்கூ கவிதைகளை வாசித்தனர். இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் வாசகர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.