சென்னை: சமீபத்தில் முதலமைச்சர் விஜய் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி ராஜா சமூகநல விடுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இதை சரி செய்து தருவதாக முதல்வர் உறுதியளித்திருந்தாலும்.. இன்னமும் பிரச்சனைகள் சரியாகவில்லை என்று OneIndia கள ஆய்வில் மாணவர்களின் தெரிவித்திருக்கின்றனர்.
மாணவர்கள் விஷயத்தில் தவெக அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசனின் கல்வி உதவி தொகை, நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களை தமிழக அரசு கையாண்ட விதம்.. இப்படியாக மாணவர்களிடையே அரசு மீது கடும் அதிருப்தி இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது எம்சி ராஜா மாணவர்களின் குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தபோது, மாணவர்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்திருந்தனர். அதில் முக்கியமானது தரமான உணவு வேண்டும் என்பதுதான். உணவு எனில், கடமைக்கு பொங்கல், புளியோதரை போட்டு கணக்கு காட்டுகிறார்கள்.. அதையெல்லாம் வாயில் கூட வைக்க முடியவில்லை. எனவே தரமான உணவை கொடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். முதலமைச்சரும் இது குறித்து சமூகநீதித்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டார். அடுத்த ஓரிரு நாட்களில்.. உணவுப்படி உயர்த்தப்பட்டது என்று அறிவிப்பு வெளியானது. ஆஹா.. இனி ஹாஸ்டல் உணவு சூப்பராக இருக்கும் என்று நினைத்த மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே ஏற்பட்டிருக்கிறது. காரணம், முன்பு ஒரு நாளைக்கு ரூ.50 என்று உணவுப்படி இருந்தது. இப்போது இது ரூ.66 என உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையில் வெறும் 66 ரூபாயை வச்சுகிட்டு ஒரு வேளை சாப்பாடு கூட சாப்பிட முடியாது.. இதுல 3 வேலை சாப்பாடு எனில்? எப்படி தரமான உணவு கிடைக்கும் என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இது குறித்து மாணவர்களின் கோரிக்கைகளை கேட்க ஒன்இந்தியா டீம் எம்சி ராஜா விடுதிக்கு நேரடியாக சென்றது. அங்கு நம்மை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் ஆகாஷிடம் விவரங்களை கேட்டோம். அவர் கூறியதாவது.. "முதல்வர் ஆய்வு பிறகு உணவுப்படியை உயர்த்தினார்கள். ஆனாலும் உயர்த்தப்பட்ட உணவுப்படி போதவில்லை. நாங்கள் மாதம் ரூ.3,500-5,000 உயர்த்தி கேட்டோம். ஆனால் அவர்கள் ரூ.1,500லிருந்து ரூ.2,000 என்று மட்டுமே உயர்த்தினார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரு நபர் ரூ.66 வைத்து எப்படி 3 வேளை உணவை சாப்பிட முடியும்? எனவே அரசு உணவுப்படி பரிசீலனை தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மறுபுறம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்க ஏ,பி,சி என பிரிவாக பிரிக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது. இதுபோக, காவல்துறையில் பணியாற்றும் மோப்ப நாய்களுக்கு கூட.. ஒரு நாளைக்கு ரூ.200 என்று மாதம் ரூ.6,000 உணவு தொகையாக வழங்கப்படுகிறது. அப்படியெனில், மோப்ப நாய்களை விட, சிறை கைதிகளை விட மாணவர்களாகிய நாங்கள் முக்கியத்துவம் இல்லாதவர்களாக மாறிவிட்டோமா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். சரி முதல்வர் ஆய்வுக்கு பிறகு விடுதியில் என்ன மாதிரியான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது? "நாங்கள் முதலமைச்சரிடம் 10 அம்ச கோரிக்கையை வைத்திருந்தோம். ஆனால் அதில் வெறும் 3 கோரிக்கைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது" என்று மாணவர் கூறினார். தமிழகம் முழுவதும் இதுபோன்ற விடுதிகள் இருக்கின்றன. இதில் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்? "தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படவே GenZ மாணவர்கள், இளைஞர்கள்தான் காரணம். ஆனால், இப்பேர்ப்பட்ட இளைஞர்களை அரசியல் புரிதல் இல்லாதவர்கள் என்று பலரும் கூறுகிறார்கள். அது உண்மை எனில், அதற்கு இந்த அரசும்தான் காரணம். விடுதிகளில் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. மாணவர் சங்க தேர்தல்கள் நடப்பதில்லை. இதையெல்லாம் நடத்தினால் எங்களுக்கான கோரிக்கையை நாங்கள் அரசிடம் தைரியமாக முன்வைத்து, எங்கள் உரிமைகளை கேட்டு பெறுவோம். எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் விடுதியில், விடுதி தேர்தல்களை அரசு நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளர். உட்கட்டமைப்பு வசதிகளில் என்ன மேம்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? "ஹாஸ்டல்ல குடிநீர் கிடையாது. குடிநீர் விநியோக்க பயன்படுத்தப்படும் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுவது கிடையாது. நாங்கள் வெளியில் பணம் கொடுத்துதான் குடிநீரை வாங்கி வந்து பயன்படுத்துகிறோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள விடுதிகளில் இதுதான் நிலைமை. அதேபோல விடுதி மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இதை சரி செய்ய வேண்டும் எனில், மாணவர்களை விளையாட்டை நோக்கி நகர்த்த வேண்டும். விளையாட்டுதான் ஒழுக்கத்தை உருவாக்கும். எனவே ஒவ்வொரு விடுதிக்கும் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவற்றை அமைத்துத்தர வேண்டும். அரசு இந்த பிரச்சனையை விரைவாக கவனத்தில் கொண்டு சரி செய்து தர வேண்டும்" என கோரிக்கை வைத்திருந்தார். கடந்த கால ஆட்சியில் விடுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கும், இந்த ஆட்சியில் விடுதியில் மேற்கொள்ளப்பட் பணிகளுக்கும் என்ன வித்தியாசத்தை பார்க்கிறீர்கள்? "நாங்கள் முன் வைத்த 10 அம்ச கோரிக்கையில் 3 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதை மாற்றமாக.. மாற்றத்தின் முதல்படியாக பார்க்கலாம். மாற்றம், மாற்றம் என்று சொல்லிதான் நாங்கள் இப்போது ஏமார்ந்து நிற்கிறோம். ஏனெனில், மாணவர்களின் கோரிக்கை ஏராளமாக இருக்கிறது. கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எங்களை போராட்டத்திற்கு தூண்ட வேண்டாம்" என்று கூறியுள்ளர்.முதலமைச்சர் ஆய்வு
தரமான உணவு
உணவுப்படி உயர்வு
மாணவர்களின் நிலை