இப்படி நடந்ததே கிடையாது.. நிர்வாக திறன் இல்லாத முதல்வர் விஜய்! செவிலியர் விஷயத்தில் விமர்சனம்

  • சென்னை: பணி நிரந்தரம், போதுமான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று சென்னையில் செவிலியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அவர்களை அரசு கைது செய்திருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். திமுக, அதிமுக ஆட்சியில் கூட செவிலியர்களின் போராட்டம் நடந்திருக்கிறது. ஆனால், அந்த ஆட்சியில் பேச்சுவார்த்தை என்று சொல்லி எப்போதும் கைது செய்தது கிடையாது என மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விமர்சித்திருக்கிறார்.

    Advertisement

    நேற்று முழுவதும் செவிலியர்களுடன் இருந்த அவர், போராட்டக்களத்தில் காவல்துறையும், அரசு அதிகாரிகளும் எப்படி செவிலியர்களை அணுகினர் என்பது குறித்தும், ஏன் அரசு இந்த கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறது என்பது குறித்தும் ஒன் இந்தியா தமிழ் ஊடகத்திற்கு விரிவாக பேட்டியளித்திருக்கிறார்.

    Advertisement

    பேட்டியில் அவர் பேசியதாவது, "2021ல திமுக ஆட்சியில் சுமார் 4,750 பேர் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் அப்படின்னு நியமிக்கப்பட்டனர். அவங்க எந்த சட்டத்தின் கீழ் வருகிறார்கள் என்பது இன்னைக்கு வரை தெரியல. அந்த அரசாங்கமும் சொல்லல.. இந்த அரசாங்கமும் சொல்லல.

    உழைப்பு சுரண்டல்

    சென்ட்ரல் கவர்மெண்ட் 60% சம்பளம் கொடுக்குறாங்க. 40% ஸ்டேட் கவர்மென்ட் சம்பளம் தராங்க. அப்படின்னா இவங்க சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஊழியரா? அல்லது ஸ்டேட் கவர்மென்ட் ஊழியரா? என்பது தெரியவில்லை. ஸ்டேட் கவர்மெண்ட் ஸ்டாப் எனில்.. அரசு ஊழியர் விதி பொருந்துமான்னு தெரியல. இவங்க தனியார் ஊழியரும் இல்லை. தொழிலாளர் சட்டத்தின் கீழ் வரல. எனவே நாங்கள் யார்? சட்ட படி எங்கள் நிலை என்ன? என்பதை செவிலியர்கள் கேட்கிறார்கள்.

    Advertisement

    ஆட்சி மாறியும் காட்சி மாறல

    தவெக வந்த பிறகு மாற்றம் வந்திருக்கு என்று நம்பிய செவிலியர்கள், விஜய் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ச்சியாக போய் மனு கொடுத்துகிட்டே இருக்காங்க. எங்களுடைய சட்ட நிலை என்ன? எங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தா.. எந்த சட்டத்தில் நாங்க கேட்குறது? லேபர் சட்டம் எங்களுக்கு பொருந்தாது, கவர்மெண்ட் ஸ்டாப் இல்ல, எந்த நிலையில் வைத்திருக்கிறீர்கள்? ஸ்கீம் ஒர்க்கர்னு சொல்லி ஒன்னு வச்சிருக்காங்க. அது சுரண்டுவதற்கான ஒரு வடிவம்.

    குறைந்தபட்ச கூலி மட்டுமே

    சென்ட்ரல் கவர்மெண்ட், ஸ்டேட் கவர்மெண்ட் என எந்த கவர்மெண்ட் வந்தாலும் சரி.. ஆட்சி மாறினாலும் அதுல காட்சி மாறாம ஒரே மாதிரி தான் இருக்குது. சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் இவர்கள் எல்லாம் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள். இவங்களுக்கு பென்ஷன் கிடையாது, ஏதும் கிடையாது குறைந்தபட்ச கூலி கொடுப்பாங்க. அதுமாதிரிதான் செவிலியர்களையும் வச்சிருக்காங்க.

    Advertisement

    போராடுகிற எல்லோரும் பிஎஸ்சி நர்சிங், எம்எஸ்சி நர்சிங் முடிச்சவங்க. இன்னைக்கு ஒரு ஸ்டாப் நர்ஸுக்கு என்ன சம்பளம் கொடுக்குறாங்க? அதே சம்பளத்தை இவர்களும் கேட்கிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்பது அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நடைமுறையில் இல்லை.

    தமிழ்நாட்டில்தான் சம்பளம் குறைவு

    முதல்வர் விஜய் தேர்தலுக்கு முன்பாக, தேர்தல் வாக்குறுதியில் ஐந்தாண்டு தற்காலிக வேலை செய்பவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும் சொன்னார். போராடும் செவிலியர்களுக்கு இந்த டிசம்பரோட 5 ஆண்டு முடியுது. நிரந்தர பணி கேட்கிறார்கள். அரசு இதைப்பற்றி பேச்சுவார்த்தை நடத்தனுமா இல்லையா? அதுவும் கிடையாது. இதில் கொடுமை என்னவெனில்.. நாடு முழுவதும் இதுபோல ஸ்கீம் ஒர்க்கராக பாணியாற்றும் செவிலியர்களுக்கு தமிழ்நாட்டில்தான் குறைந்தபட்ட சம்பளம் கொடுக்கப்படுகிறது.

    Advertisement

    மக்களுக்கு சேவை செய்பவர்கள்

    கர்நாடகாவில் ரூ.38,000 அரியானாவில் ரூ.70,000 பாண்டிச்சேரியில் ரூ.45,000 தருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் வெறும் ரூ.21,000 மட்டுமே சம்பளம் தருகிறார்கள். இவங்களுக்கு யூனிஃபார்ம் அளவன்ஸ் கிடையாது. அவங்க தான் யூனிபார்ம் வாங்கின தைக்கணும். டிரான்ஸ்போர்ட் அலவன்ஸ் கிடையாது. முறையாக ட்ரான்ஸ்பர்கள் வழங்கப்படுவதில்லை.

    இவர்களுக்கு வீடு ஒரு இடத்திலிருக்கும்.. பணியிடம் வேற எங்கயாவது இருக்கும். அனைவரும் கிராமப் பகுதியில் வேலை செய்பவர்கள். இவர்களின் வசிப்பிடம் எந்த நகரங்களில் இருந்தாலும் நகரங்களில் வேலை செய்கிறது கிடையாது. கிராமத்துல சாதாரண மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்கள்.

    சென்னையில் செவிலியர்கள் குண்டுகட்டாக கைது.. மின்சாரம் துண்டிப்பால் டார்ச் வெளிச்சத்தில் போராட்டம்!
    Advertisement

    இதை வைத்து எப்படி வாழ்க்கையை நகர்த்துவது?

    மக்களுக்கு 12 வகையான மருத்துவ சேவை செய்து.. பிளட் பிரஷர்ல இருந்து, ஹார்ட் அட்டாக் வரை பார்த்து பார்த்து நோய் வருவதற்கு முன்பாக தடுக்க கூடிய சேவை செய்யக்கூடிய ஒரு முக்கியமான பணியை செய்றாங்க. இந்த பணிகளுக்காக தங்களது சொந்த சம்பளத்தை செலவு செய்கிறார்கள். செலவு போக வெறும் ரூ.14,000 - 15,000 தான் கையில் இருக்கும். இதை வைத்து எப்படி வாழ முடியும்? சென்னையில், மதுரையில் வீடு வாடகை எவ்வளவு? ரூ.10,000க்கு குறைவாக வீடு கிடைக்காது.

    மீதமிருக்கும் சம்பளம் வாடகைக்கே போய்விடுகிறது எனில் கல்வி, உடல் நல பிரச்சினைகளுக்கு எப்படி இவர்களால் செலவு செய்ய முடியும்? சுகாதார பணியாளர்களின் உடல் நலத்தையே இந்த அரசு கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது. எனவேதான் அவர்கள் சென்னையில் போராட்டத்தை நடத்தினார்கள். அவர்கள் கேட்பதெல்லாம் விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான்" என்று கூறியுள்ளார்.

    English Summary

    While nurses staged a protest in Chennai yesterday pressing for various demands—including job regularisation and adequate wages—the government arrested them after promising to hold talks. This move has drawn condemnation from various quarters. Senior lawyer Vanchinathan criticised the action, noting that while nurses had staged protests during the tenures of both the DMK and AIADMK governments, they were never arrested under the pretext of holding talks during those regimes.