நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்.. சிலிண்டர் விலை, பென்சன், டாஸ்மாக், வருமான வரி வரை

  • ஒவ்வொரு மாதத்தின் 1 ம் தேதி தொடங்கும் போதும் சில மாற்றங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. அந்த வகையில் நவம்பர் மாதம் நாளை மறுநாள் தொடங்குவதையொட்டி நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பான பல்வேறு மாற்றங்கள் நாடு முழுவதும் வருகிறது. தமிழ்நாட்டிலும் சில மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. எனவே நவம்பர் 1 முதல் பொதுமக்கள், ஓய்வூதியதாரர்கள், டாஸ்மாக் மதுப்பிரியர்கள் மற்றும் வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய காலக்கெடுக்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் பற்றி பார்ப்போம்.

    Advertisement

    நவம்பர் 1 முதல் ஜிஎஸ்டி விதிகளில் மாற்றங்களை அமல்படுத்தும் மத்திய அரசு

    , விற்பனைக்குப் பிந்தைய தள்ளுபடிகள் தொடர்பான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிகளை எளிமைப்படுத்தவும், வரி விகிதங்களில் உள்ள முரண்பாடுகளால் பாதிக்கப்படும் நிறுவனங்களுக்கு இடைக்கால வரித் திருப்பித் தொகையை விரைவுபடுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு அக்டோபர் 26-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கைகள் 2026-27 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றங்கள் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது

    Advertisement

    சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம்?

    பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் வீடுகள் மற்றும் வணிகங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மறுஆய்வு செய்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையில் ஒவ்வொரு மாதமும் மாற்றம் ஏற்படுகிறது. வீடுகளுக்கு மட்டும் எப்போதாவது மாற்றம் ஏற்படுகிறது. சமையல் எரிவாயுவை அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்தும் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படுகிறது. அக்டோபர் 29-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி, 2026 நவம்பர் 1 முதல் எல்பிஜி விலையில் மாற்றம் செய்யப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே, சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கு முன்பு தங்களது எரிவாயு விநியோகஸ்தர் வெளியிடும் சமீபத்திய விலையை நுகர்வோர் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

    Advertisement


    ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1 முதல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்

    அரசு ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு ஆண்டுதோறும் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். 80 வயதுக்குக் குறைவான ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1 முதல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அக்டோபர் 1 முதலே இதைச் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30 ஆகும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தவறினால், அதைச் சமர்ப்பிக்கும் வரை ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

    வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

    தணிக்கைக்கு உட்பட்ட கணக்குகளைக் கொண்ட குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த வரி செலுத்துவோருக்கான வருமான வரிக் கணக்குத் தாக்கல் காலக்கெடுவை வருமான வரித்துறை நீட்டித்திருக்கிறது. மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், அக்டோபர் 31-ஆம் தேதியிலிருந்து நவம்பர் 21, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு தகுதியுடைய குறிப்பிட்ட வரி செலுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும். அனைத்து தனிநபர்களுக்கும் இது பொருந்தாது.

    Advertisement

    நவம்பர் 1 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியச் சீர்திருத்தங்கள் அமலுக்கு வராது

    மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய உதவியை விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவை அண்மையில் சில மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.
    இதன்படி, ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச மாற்றுத்திறன் அளவை 80 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைக்கவும், தகுதி பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை நீக்கவும் திட்டமிட்டிருக்கிறது. தகுதியுடைய 80 வயதுக்குக் குறைவான பயனாளிகளுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் மாதாந்திர உதவித்தொகையை ரூ.375 ஆகவும், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.625 ஆகவும் உயர்த்தவும் முன்மொழிந்துள்ளது. எனினும் இந்த மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே, இந்த மாற்றங்கள் நவம்பர் 1 முதல் அமலுக்கு வர வாய்ப்பு இல்லை
    பயனாளிகள் அதிகாரப்பூர்வ நடைமுறை அறிவிப்புகள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.

    Advertisement


    டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை உயர்வு

    மதுபானங்கள் விற்பனையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள், பீர், ஒயின், பிற மாநில மதுபானங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் உள்ளிட்ட அனைத்து வகைகளின் அதிகபட்ச சில்லறை விலையும் நவம்பர் 1-ந்தேதி முதல், அனைத்து அளவிலான பாட்டில்களுக்கும் ரூ.10 உயர்த்தப்படுகிறது.

    இந்தக் கட்டண விதிப்பால் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலையுடன், எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதுபானங்களின் விலையும் திருத்தப்படுகிறது. டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து எப்.எல்.2 உரிமம் பெற்ற மதுக்கூடங்களுக்கு வழங்கப்படும் மதுபானங்களின் விலையும், சில்லறை விற்பனைக் கடைகளின் விலைக்கு இணையாக உயர்த்தப்படுகிறது என்று அரசு அறிவித்துள்ளது

    Advertisement

    டாஸ்மாக்கில் டிஜிட்டல் பரிவர்த்தனை கட்டாயம்

    அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும், தற்போது, ரொக்கமில்லா டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையைப் படிப்படியாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நவ.01- ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் ஒரு விற்பனையில் ரூபாய் 1,000- க்கு மேற்பட்ட மதிப்புள்ள மதுபானங்களை வாங்கும்போது, யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். 2027 ஜன.01 முதல் ஒரு விற்பனையில் ரூபாய் 500- க்கு மேற்பட்ட மதிப்புள்ள மதுபானங்களை வாங்கும்போது, யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். இந்நடைமுறையைச் செம்மையாகச் செயல்படுத்த அனைத்து மாவட்ட மேலாளர்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    English Summary

    Let us look at the deadlines and important announcements that the general public, pensioners, TASMAC liquor consumers, and taxpayers need to be aware of, effective from November 1st.