சென்னையில் செவிலியர்கள் குண்டுகட்டாக கைது.. மின்சாரம் துண்டிப்பால் டார்ச் வெளிச்சத்தில் போராட்டம்!

  • சென்னை: பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களில் சிலரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்துள்ளனர்.

    Advertisement

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே, தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போல தங்களுக்கும் பணிப் பாதுகாப்பும், ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் என்ற பதவிப் பெயருக்குப் பதிலாக, சமூக சுகாதார அதிகாரி என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக வழங்க வேண்டும் என்றும், இப்பெயரையே பணி நியமன ஆணையும் குறிப்பிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போல, தமிழகத்திலும் ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    பிற மாநிலங்களில் சி.எச்.ஓ.-க்களுக்கு சுமார் ரூபாய் 70,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, தங்களுக்கும் அதே அளவிலான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று அவர்கள் தொடர் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வருகின்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களில் சிலர் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    இன்று காலை முதல் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து செல்போன் டார்ச் வெளிச்சத்தில் செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பேச்சுவார்த்தை எனக் கூறி நிர்வாகிகளை அழைத்துச் சென்று அவர்களை போலீசார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் பலர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    English Summary

    Nurses are staging a protest in Chennai, pressing for demands such as job regularisation, job security, and equal pay for equal work. Police have forcibly arrested some of the nurses who were participating in the protest at the Rajarathinam Stadium in Egmore.