சென்னை: சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் சிலர் மற்றும் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோரை பேச்சுவார்த்தை எனக் கூறி, போலீசார் அழைத்துச் சென்று, அவர்களை மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் இன்று சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டிப்ளமோ, பி.எஸ்.சி. நர்சிங் முடித்த சுமார் 1000த்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த செவிலியர்கள் தரையில் அமர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களில் சிலர் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, செவிலியர்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்த சிலர் மற்றும் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோரை பேச்சுவார்த்தை எனக் கூறி, போலீசார் அழைத்துச் சென்று, அவர்களை மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். போராடி வரும் செவிலியர்களை அத்துமீறி கைது செய்ய காவல்துறையினர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "இந்த துரோகத்தையும் அராஜகத்தையும் எந்தவொரு அரசும் செய்தது இல்லை" என செலிவியர்கள் கொந்தளித்துப் பேசியுள்ளனர். முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று காலை முதல் சென்னையில் நடைபெற்ற தொடர் போராட்டத்தில், மாலையில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி என்னையும், போராட்டக் குழுவின் 10 நிர்வாகிகளையும் தமிழகக் காவல்துறை அழைத்துச் சென்றது. ஆனால் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல், கைது செய்து அடைத்து வைத்திருக்கிறார்கள். இது தான் ஜனநாயகமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.