சென்னை: சென்னை எழும்பூரில் நடைபெற்ற செவிலியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலர் உறுதியளித்ததால், நவம்பர் 3 வரை காத்திருக்க செவிலியர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் பொறுப்பில் இருக்கும் செவிலியர்கள் 1000க்கும் மேற்பட்டோர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு இணையாக ரூ.45,000 ஊதியம் வழங்க வேண்டும். செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். தவெக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்திருந்தனர். தங்களின் கோரிக்கைகளை அரசு மதித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரி வந்தனர். திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜும் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்திருந்தார். இரவு வரை போராட்டம் தொடந்ததால் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். செவிலியர்களின் பிரதிநிதிகள், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோரை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த காவல்துறை அழைத்துச் சென்றது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு கூட்டி செல்லாமல் காவல்துறை அவர்களை மண்டபத்தில் அடைத்து வைத்ததாக தகவல் வெளியானது. மேலும், போராட்டம் நடந்த இடத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனினும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராடிய செவிலியர்களை கைது செய்ய போலீஸ் வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. எனினும், ஆயிரத்துக்கும் மேட்பட்ட செவிலியர்கள் இருந்ததால் கைது செய்ய வந்த பேருந்துகளை மறித்து மற்ற செவிலியர்கள் சாலையில் அமர்ந்துவிட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, போலீஸ் வாகனங்கள் திரும்பிச் சென்றன. செவிலியர்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில் அவர்களை கைது செய்ய போலீசார் இரவு நேரத்தில் முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பேச்சுவார்த்தை எனக் கூறி ஏமாற்றிவிட்டதாக அரசு மீது கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில், ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராடிய தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக அந்தச் சங்கத்தினர் அறிவித்தனர். செவிலியர்கள் சங்கத்தின் கோரிக்கைகளைப் பரிசீலிக்க நவம்பர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குமாறு சுகாதாரத் துறை செயலர் கேட்டுக்கொண்டுள்ளார். அதனை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.