சென்னை: முந்தைய திமுக அட்சியின்போது செவிலியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து "ஆட்சிக்கு வந்த முதல் நாளே பணி நிரந்தரம் செய்வோம்" என உறுதி அளித்திருந்தார் ஆதவ் அர்ஜுனா. தற்போது போராடிய செவிலியர்கள் மீது தற்போது தவெக அரசு ஒடுக்குமுறையைக் கையாண்டிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் நேற்று காலை முதலே ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் செவிலியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தினர். குறிப்பாக, தங்களின் கோரிக்கைகளை மதித்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று செவிலியர்கள் கோரிக்கை வைத்தனர். மாலையில் செவிலியர்களின் பிரதிநிதிகள், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோரை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த போலீசார் அழைத்துச் சென்றனர். ஆனால், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு கூட்டிச் செல்லப்படாமல் போலீசாரால் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களை விடுவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என செவிலியர்கள் கூறினர். இதனால், போராட்டம் நடைபெற்ற இடத்தின் மின் இணைப்பை துண்டித்து பந்தல்களை கலைத்த போலீசார், போராட்டத்திலிருந்து கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும், செவிலியர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 8:30 மணியளவில் போலீசார், செவிலியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து பேருந்தில் ஏற்றத் தொடங்கினர். அங்கிருந்த ஆயிரத்துக்கும் மேட்பட்ட செவிலியர்கள், கைது செய்து ஏற்றிச் செல்ல வந்த பேருந்துகளை மறித்து சாலையில் அமர்ந்தனர். இதனால் செவிலியர்களுக்கு போலீஸூக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில், போராடிய செவிலியர்களை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் கைது நடவடிக்கையை கைவிட்டனர். இருப்பினும் செவிலியர்கள் செல்போன் டார்ச் அடித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. தொடர்ந்து, போராட்டம் நீடித்த நிலையில் தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் சுகாதாரத் துறை செயலர் பேச்சுவார்த்தை நடத்தினார். செவிலியர்கள் சங்கத்தின் கோரிக்கைகளைப் பரிசீலிக்க நவம்பர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குமாறு சுகாதாரத் துறை செயலர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக அந்தச் சங்கத்தினர் அறிவித்தனர். கடந்த திமுக ஆட்சி காலத்தில் செவிலியர்களின் போராட்டம் நடைபெற்றபோது இன்று தவெகவில் அமைச்சர்களாக இருக்கும் சிலர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆதவ் அர்ஜுனா செவிலியர்களின் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தார். அப்போது ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "உங்கள் மீது ஒரு கீறல் விழுந்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும். இந்த கைதுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் உங்களுடன் இருப்போம். ஆட்சிக்கு வந்த முதல் நாளே பணி நிரந்தரம் செய்வோம்" என உறுதி அளித்திருந்தார். ஆனால், தற்போது தவெக ஆட்சியில் அதே செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது அவர்களின் கோரிக்கைகளை செவி கொடுத்துக் கேட்காமல், அத்துமீறி கைது செய்து, போராட்டத்தை முடக்குவதா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.