8 கால்களில் மீனவர் முகத்தை கவ்விய ஆக்டோபஸ்.. வேக்யூம் கிளீனர் போல இறுக்கி.. கடலில் திகில் நொடி

  • சென்னை: கடலின் ஆழத்தில் எந்த நேரத்தில், என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது என்பார்கள். ஒரு மீனவர் மீன்பிடிக்க கடலுக்கு கிளம்பி சென்றால், அவர் எத்தனையோ ஆபத்துகளை கடந்துதான் வீடு வந்து சேரவேண்டியிருக்கிறது.. இதோ பிலிப்பைன்ஸில் ஒரு மீனவர் மீன்பிடிக்க போயிருக்கிறார்.. இப்படியெல்லாம் நடக்கும் என்று அவர் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அவரது வாழ்நாளில் மறக்க முடியாத முடியாத நாளாக அது மாறிவிட்டது..

    Advertisement

    பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்பகுதியில் வழக்கம் போல் மீன்பிடிக்கச் சென்றிருக்கிறார். எதிர்பாராத விதமாக ஒரு பெரிய ஆக்டோபஸின் பார்வையில் அவர் பட்டுவிட்டார். திடீரென பாய்ந்த அந்த ஆக்டோபஸ், மீனவரின் முகத்தை அப்படியே கவ்வி பிடித்துக்கொண்டது. அதாவது அதன் 8 கைகளும் அவரது முகத்தையும் தலையையும் சுற்றி இறுக்கமாக பின்னி பிணைந்தன.

    Advertisement

    ஆக்டோபஸின் ஒவ்வொரு கையிலும், நூற்றுக்கணக்கான Suction Cups அதாவது குட்டிகுட்டி ரப்பர் உறிஞ்சான்கள் இருக்கும். இவை எதன் மீதாவது பட்டால் உடனே காற்றை வெளியேற்றி, வேக்யூம் க்ளீனர் போல பிரிக்க முடியாத அளவுக்கு இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும்.

    8 கால்களுடன் மீனவர் முகத்தில்

    அதுமட்டுமல்லாமல், இந்த உறிஞ்சான்களுக்குத் தொடும் உணர்ச்சியோடு சேர்த்து சுவை மற்றும் கெமிக்கல்களை உணரும் திறனும் உண்டு. மீனவர் தன்னுடைய முகத்திலிருந்து அதை வலுக்கட்டாயமாக பிரிக்க முயன்றபோது, ஆக்டோபஸுக்கு ஆபத்து உணர்வு ஏற்பட்டதால், அது பயந்துபோய் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி மீனவரின் முகத்தை இன்னும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.

    Advertisement

    மூச்சு விடக் கூட முடியாமல், முகத்தில் படர்ந்திருந்த அந்த உயிரினத்தின் பிடியிலிருந்து தப்பிக்க அந்த மீனவர் நிறையவே போராடினார்.. ஆரம்பத்தில் கைகளால் இழுத்துப் பிரிக்க முயன்றும் அது முடியவில்லை.

    பிறகு, படகில் இருந்த மூங்கில் கட்டையின் உதவியாலும், தன் கைகளாலும் அதன் பிடியை ஒவ்வொன்றாகத் தளர்த்த போராடினார். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அதிர்ஷ்டவசமாக அந்த ஆக்டோபஸின் பிடி தளர்ந்தது. ஒருவழியாக தன்னுடைய முகத்திலிருந்து அதை உருவி எடுத்த மீனவர், அதை மீண்டும் கடல் நீரிலேயே வீசியெறிந்தார்.

    திகில் விநாடிகள்

    இந்தத் திகில் விநாடிகள் அடங்கிய வீடியோ "வைரல் பிரஸ்"என்ற சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியாகி, உலகளவில் இணையத்தைக் கலக்கி வருகிறது.

    Advertisement

    கடல்சார் உயிரியல் வல்லுநர்கள் இது குறித்து சொல்லும்போது, ஆக்டோபஸ் மனிதர்களை வேட்டையாடும் நோக்கில் இப்படி செய்யவில்லை என்றும், எதிர்பாராத சூழ்நிலையில் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், பிடிமானத்தைபெறவும் மட்டுமே அப்படி ஒட்டிக்கொண்டது என்றும் விளக்கம் தந்துள்ளார்கள்.

    ஆக்டோபஸ்கள் ஆபத்தானவையா

    பொதுவாக ஆக்டோபஸ்கள் மனிதர்களுக்கு பெரிய ஆபத்தானவை கிடையாது.. அவை மனிதர்களை வேட்டையாடுவதோ அல்லது காரணமின்றி தாக்குவதோ இல்லை. பெரும்பாலான ஆக்டோபஸ்களின் விஷம் மனிதர்களை கொல்லும் அளவுக்கு வீரியமானது கிடையாது என்றாலும், ஆஸ்திரேலியா பகுதியில் காணப்படும் புளூ-ரிங்க்ட் ஆக்டோபஸ் (Blue-ringed octopus) போன்ற மிகச் சில சிறிய வகை ஆக்டோபஸ்கள் கடித்தால், அதன் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் கொடிய விஷத்தால் மனிதர்கள் சில நிமிடங்களில் உயிரிழக்கக் கூடும்.

    Advertisement

    பெரிய வகை ஆக்டோபஸ்கள் ஆபத்தில் இருக்கும்போது தங்களை தற்காத்துக்கொள்ள மட்டுமே மனிதர்களை இப்படி தங்கள் வலுவான கால்களால் இறுக்கமாக பிடித்துக்கொள்ளுமாம். இருந்தாலும் நாம் பதற்றமடையாமல் அமைதியாக இருந்தால் அவற்றின் பிடியிலிருந்து மிக எளிதாகத் தப்பித்துவிட முடியும்.. காரணம், ஆக்டோபஸ்கள் மனிதர்களுடன் போராடுவதை விரும்புவதில்லையாம்..!!

    English Summary

    Octopus Grabs Fisherman’s Face With 8 Arms.. Squeezes Like a Vacuum Cleaner in Sea