என்ன பிரச்சனை வந்தாலும் சரி.. வேலையை தொடங்குங்க.. பட்டினபாக்கத்தில் தான் தலைமைச் செயலகம் அமைகிறதா?

  • சென்னை: பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் பணிகளில் முதல்வர் விஜய் மற்றும் தவெக தலைமை உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக பழைய குடியிருப்புகளை இடிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மீனவர்கள் எதிர்ப்புக்கு மத்தியில் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்துவது எப்படி என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பி இருக்கிறார்கள்.

    Advertisement

    தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த நாளில் இருந்தே முதல்வர் விஜய் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். ஏற்கனவே முதல்வர் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. கடலை பார்த்தவாறு விஜய் அலுவலகம் அமைகிறது.

    Advertisement

    இதனிடையே சட்டசபையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று விஜய் அறிவித்தார். இதன்பின் புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் கடற்கரைக்கு அருகில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இடம் விஜய்யின் வீட்டில் இருந்து 50 மீட்டர் தூரம் மட்டுமே உள்ளது. இதனால் ஜோசியர் சொன்னபடி தலைமைச் செயலகத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது.

    அதேபோல் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்பட்டால், அது 9 மீனவ கிராமங்களை பாதிக்கும் என்று தெரிய வந்தது. இதனால் அங்கு புதிய தலைமைச் செயலகம் அமையக் கூடாது என்று திமுக, அதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கம்யூனிஸ்ட்டுகள் மீனவர்களுடன் இணைந்து தீவிர போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    இதற்கு மத்தியில் மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கு முன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மீனவர்களா? தலைமைச் செயலகமா? என்று வந்தால், முதல்வர் விஜய் மீனவர்கள் பக்கமே நிற்பார் என்று கூறினார். ஆனாலும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்படாது என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிடாமல் அமைதி காத்தது.

    பலியான 9 காசிமேடு மீனவர்கள்.. கேள்வி எழுப்பிய மக்கள்.. தலைகுனிந்து சிலை போல நின்ற அமைச்சர் ஸ்ரீநாத்

    இதனால் மீனவர்கள் தொடர்ச்சியாக போராடி வந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பட்டினப்பாக்கத்தில் உள்ள பழைய குடியிருப்புகளை இடிக்க உத்தரவிடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் கொந்தளித்து வருகின்றனர். இதனிடையே தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

    Advertisement

    ஆனால் முதல்வர் விஜய் மற்றும் தவெக தலைமை தரப்பில், என்ன பிரச்சனை வந்தாலும் சரி.. பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட அடிக்கல் நாட்டுவதற்கான வேலைகளை தொடங்குங்கள் என்று கூறி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் மீனவர்கள் உடனான கருத்துக் கேட்பு கூட்டத்தை எப்படி நடத்துவது என்று அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    English Summary

    Officials Caught Off Guard as CM Vijay and TVK Administration Presses for Pattinapakkam Secretariat