ஸ்டாலின் ஆட்சியில் மிஸ்ஸிங்.. அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு? விஜய்க்கு பறந்த கடிதம்

  • சென்னை: ஸ்டாலினின் கடந்த திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட ஓய்வூதிய வாக்குறுதிகள் நிறைவேறாத நிலையில், புதிய ஆட்சியில் அது நிறைவேறும் என ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நிதிநிலை அறிக்கையில் ஓய்வூதிய நிதி குறைக்கப்பட்டதால் தலைமைச் செயலகச் சங்கம் சார்பில் முதல்வர் விஜய்க்கு அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதை பற்றி எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் நீண்ட கால கனவான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

    Advertisement

    தமிழக அரசு ஊழியர்கள்

    அதிலும் தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த பிறகு, தங்களின் முதன்மையான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் உடனடியாகச் செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு முழுமையாக இருந்தது.

    ஆனால் எல்லாமே கனவாகிவிடும் போல உள்ளது.. தற்போது தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதாகத் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் சார்பாக முதல்வர் விஜய்க்கு அவசரக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

    Advertisement

    தலைமைச் செயலகக் சங்கம்

    அந்தக் கடிதத்தில், நிதிநிலை அறிக்கையில் ஓய்வூதியத்திற்கான ஒதுக்கீடு ரூ. 14,000 கோடி அளவிற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தலைமைச் செயலகச் சங்கம் தெரிவித்துள்ளதாவது:

    "ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தமிழகத்திலுள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அனைவரும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழக வெற்றிக் கழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த வேளையில், நிதிநிலை அறிக்கையில் ஓய்வூதியத்திற்கான ஒதுக்கீடு என்பது ரூ.14,000 கோடி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது என்பது பேரதிர்ச்சியாக உள்ளது. முதற்கண் இதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் சார்பாக கடுமையான ஆட்சேபணையினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    Advertisement

    ஓய்வூதியத்திற்கான நிதி குறைப்பு

    ஓய்வூதியத்திற்கான நிதி குறைப்பில், ஏற்கனவே முந்தைய திராவிட முன்னேற்றக் கழக அரசால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டத்திற்கான ஆண்டு ஒதுக்கீடான ரூ.11,000 கோடி என்பது முழுமையாக வெட்டப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், பல்வேறு இனங்களில் மேலும் ரூ.3,000 கோடி அளவிற்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் நலனில் முழுமையாக கவனம் கொண்டு செயலாற்றி வரும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஓய்வூதிய காலப் பலன்களில் ரூ.14,000 கோடி அளவிற்கு நிதிநிலை அறிக்கையில் குறைக்கப்பட்டுள்ளதற்கான விளக்கத்தினை தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்து, தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் வாழ்நாள் கனவான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பினையும் வெளியிட வேண்டும்" என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அந்த கடிதத்தில் மிகவும் அழுத்தமாக சுட்டிக் காட்டியிருக்கிறது.

    Advertisement

    நிதி ஒதுக்கீடு அதிகரிக்குமா

    நிதி ஒதுக்கீட்டில் செய்யப்பட்டுள்ள இந்த திடீர் வெட்டு மற்றும் குறைப்பு நடவடிக்கைகள், லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் அளிக்கப்போகும் விளக்கம் என்னவாக இருக்கும்? என்று அரசுத் துறை ஊழியர்கள் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்..!!

    - எழில்

    English Summary

    Old Pension Scheme Missing Under Stalin Government? Tamil Nadu Employees Send Letter to Vijay Government