ஒரு பக்கம் ஆம்னி பஸ்களில் கட்டண கொள்ளை.. மறுபக்கம் சிறப்பு பேருந்துகளே அறிவிக்காத டிஎன்எஸ்டிசி

  • சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் திங்கள்கிழமை வருகிறது. இதன் காரணமாக சனி, ஞாயிறு , திங்கள் என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த விடுமுறையை முன்னிட்டு இன்று பலரும் ஆம்னி பஸ்களில் மற்றும் அரசு பேருந்துகளில் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைவிட 4 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது. மதுரை செல்ல அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் டிஎன்எஸ்சிடிசி, தேனி, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்பட பல்வேறு ஊர்களுக்கு போதிய சிறப்பு பேருந்துகளை அறிவிக்கவில்லை.. ஆன்லைனில் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    Advertisement

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிறந்து வளர்ந்த மக்கள் பிழைப்புக்காக சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் வசிக்கிறார்கள். அந்த வகையில் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் கல்வி, வேலை, சுயதொழில், வியாபாரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் வாழ்கிறார்கள். சென்னையில் உண்மையான மக்கள் தொகை என்பது ஒன்றரை கோடிக்கும் அதிகம் என்றால், மிதக்கும் மக்கள் தொகை என அழைக்கப்படும், சொந்த ஊரை விட்டு சென்னையில் வாழ்பவர்களின் எண்ணிகை 50 லட்சத்திற்கும் அதிகமாகவே இருக்கிறது.

    Advertisement

    இவர்கள் எல்லாருமே தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் விழாக்காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பஸ்,ரயில், சொந்த கார்களில், சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கமாக உள்ளது. இதில் மக்களின் முதல் தேர்வு ரயிலாக உள்ளது. ஆனால் ரயில்களில் இருக்கைகள் முன்பாட்டியே நிரம்பிவிடுகிறது. ரயில்வேயும் போதிய ரயில்களை அறிவிப்பதே இல்லை.. பெயருக்கு இரண்டு சிறப்பு ரயில்களுடன் கடமையை முடித்துக் கொள்கிறது.

    ரயில்களில் இடம் இல்லாத காரணத்தால் பெரும்பாலான மக்கள் பஸ் போக்குவரத்தையே நம்பி இருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்கள் பஸ் பயண டிக்கெட் விலையை விழாக்காலங்களில் கடுமையாக உயர்த்துவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட இருக்கிறார்கள். இதனால், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்திருக்கிறது.

    Advertisement

    அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4013-ம், கோவைக்கு ரூ.3 239-ம், நெல்லைக்கு ரூ.3499-ம், கன்னியாகுமரிக்கு ரூ.3 882-ம், நாகர்கோவிலுக்கு ரூ.3 ஆயிரத்து 699-ம், ஈரோட்டிற்கு ரூ.2580-ம் கட்டணமாக உள்ளது. அதேபோல் மறுமார்க்கத்தில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கான அதிகபட்ச பஸ் கட்டணமாக மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2 650-ம், கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.2 999-ம், நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.3999-ம், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ரூ.3 831-ம், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரூ.3599-ம், தற்போதைய கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு நகரங்களுக்கு குறைந்தபட்ச கட்டணமே 1200 ரூபாய்க்கு மேல் தான் இருக்கிறது.

    Advertisement

    இதுஒருபுறம் இருக்க, மதுரை, தேனி, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில் என தமிழ்நாட்டின் எந்த ஒரு தொலைதூர நகரங்களுக்கு அரசு சிறப்பு பேருந்துகளே அறிவிக்கவில்லை. வழக்கமாக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டால், அந்த பேருந்துகள் புறப்படும் நேரம் குறித்தும், முன்பதிவு வசதிகளும் டிஎன்எஸ்சிடி இணையதளத்தில் இடம் பெறும். ஆனால் கூடுதல் சிறப்பு பேருந்துகள் எதுவும் ஆன்லைனில் காட்டவில்லை. இதனால் மக்கள் முன்பதிவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியின் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்தது. அப்போதும் இதேபோல் தான் சிறப்பு பேருந்துகளை அரசு அறிவிக்கவில்லை.. கடந்த ஆட்சியில் 3+2 இருக்கைகள் கொண்ட பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு தேவைக்கேற்ப அறிவிக்கப்பட்டது என்றும், இப்போது அப்படியான சிஸ்டத்தையே தவெக அரசு பின்பற்றவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    English Summary

    On one hand, exorbitant fares charged by private omni-buses; on the other, the TNSTC has not even announced special bus services.