ஆம்னி பஸ் பர்மிட் திடீர் லேட்.. நூற்றுக்கணக்கான சென்னை பஸ்கள் காத்திருப்பு.. மக்களுக்கு தீர்வு என்ன?

  • சென்னை: தமிழகத்தில் ஆம்னி பஸ்களுக்கான பர்மிட் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. நிலுவையிலுள்ள பர்மிட்களை சீக்கிரமாக வழங்க வேண்டும் என்றும், பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு சிஎம்டிஏ பஸ் ஸ்டாண்டை ஆம்னி பேருந்துகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன், முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் உள்ள விவரம் இதுதான்:

    Advertisement

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தினசரி சுமார் 1,200 ஆம்னி பேருந்துகளும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சுமார் 600 பேருந்துகளும் என மொத்தம் 1,800 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தினசரி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைகின்றனர்.

    ஆம்னி பஸ்கள்

    தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு, தினசரி சுமார் 2.50 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆம்னி பேருந்து துறை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.900 கோடி நேரடி வருவாயும், ரூ.3,000 கோடி மறைமுக வருவாயும் கிடைத்து வருகிறது.

    Advertisement

    இந்நிலையில், புதிய போக்குவரத்து ஆணையர் பொறுப்பேற்ற பின்னர் 270 பேருந்துகளுக்கான பர்மிட்கள் வழங்கப்பட்டன. ஆனால் அதன்பிறகு விண்ணப்பிக்கப்பட்ட சுமார் 300 பர்மிட்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பர்மிட் வழங்கப்பட்ட 270 பேருந்துகளுக்கு ஒரு பேருந்துக்கு காலாண்டுக்கு ரூ.1.50 லட்சம் வீதம் சாலை வரி செலுத்தப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து ஆணையரின் இறுதி ஒப்புதல் கிடைக்காததால் அந்த பேருந்துகளையும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள்

    மேலும், தமிழகத்தில் உள்ள 22 எல்லைச் சுங்கச்சாவடிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, ஒரு வாகனத்திற்கு ரூ.500 முதல் ரூ.3,000 வரை கையூட்டு வசூலிக்கப்படுகிறது.

    Advertisement

    தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த பல ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளை தமிழகத்தில் இயக்க முற்பட்டால், தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகலாம்.

    சென்னை கோயம்பேட்டில் தற்போது சுமார் 150 ஆம்னி பேருந்துகளை மட்டுமே நிறுத்த முடிவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், வடசென்னை, மத்திய சென்னை மற்றும் மேற்கு சென்னை பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் கிளாம்பாக்கம் செல்ல கூடுதலாக 2 மணி நேரம் வரை பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

    Advertisement

    கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு

    எனவே, பயன்பாடின்றி உள்ள கோயம்பேடு சிஎம்டிஏ பேருந்து நிலையத்தை ஆம்னி மற்றும் அரசு பேருந்துகளின் பயன்பாட்டுக்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வழங்க வேண்டும். கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் பயன்படுத்துவது கிளாம்பாக்கத்திற்கு மாற்றுத் திட்டம் அல்ல. ஆனால், 'கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்' என்ற Multi-Hub முறையில் பேருந்துகளை இயக்குவதன் மூலம் பயணிகளின் நேரமும், செலவும் குறைவதுடன், அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

    எனவே, நிலுவையில் உள்ள ஆம்னி பேருந்துகளுக்கான அனுமதிகளை விரைந்து வழங்குவதுடன், ஏற்கனவே வரி செலுத்தி காத்திருக்கும் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும். மேலும், சுங்கச்சாவடிகள் அருகே நடைபெறுவதாக கூறப்படும் கையூட்டு வசூல் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஆம்னி பேருந்துகளின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    Advertisement

    அரசு அனைத்தையும் ஏற்குமா?

    இதுகுறித்து நாம் ஆம்னி பஸ்கள் தொடர்புடையவர்களிடம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் சொல்லும்போது, "இந்த கோரிக்கையை அரசு மொத்தமாக பரிசீலிக்குமா தெரியவில்லை.. இந்த கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வதைவிட, ஓரளவு மட்டுமே ஏற்கும் வாய்ப்புதான் அதிகம்... குறிப்பாக நிலுவையில் உள்ள ஆம்னி பஸ் பர்மிட்களை விரைந்து வழங்குவது, ஏற்கனவே வரி செலுத்திய 270 பேருந்துகளுக்கு அனுமதி வழங்குவது போன்றவை நடைமுறையில் அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாததால் பரிசீலிக்கப்படலாம்.

    அதேசமயம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை நிரந்தரமாக மீண்டும் ஆம்னி பேருந்துகளுக்கு திறப்பது என்பது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மையமாக்கிய அரசின் இப்போதுள்ள திட்டத்துடன் முரண்படக்கூடியது என்பதால், இதில் அரசு தயக்கம் காட்ட நிறையவே வாய்ப்புள்ளது.

    பிளஸ் & மைனஸ் பாயிண்ட்கள்

    ஒருவேளை ஆம்னி பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால், வடசென்னை, மத்திய சென்னை, மேற்கு சென்னை பயணிகளின் கூடுதல் பயண நேரம் குறையும்.. அத்துடன் கோயம்பேடு, கிளாம்பாக்கம் என 2 மையங்களில் பேருந்துகளை பிரிப்பதால் போக்குவரத்து அழுத்தமும் குறையலாம், ஆம்னி பேருந்து துறையிலிருந்து அரசுக்கு வருவாயும் தொடரும்.

    அதேசமயம், அதாவது 2 பேருந்து மையங்கள் உருவானால் பயணிகள் குழப்பமடையலாம்.. போக்குவரத்து & நிர்வாகம் இரண்டையும் ஒருங்கிணைப்பதும் சவாலாக மாறும்..

    அல்லது இந்த கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், ஆம்னி பேருந்துகள் தொடர்ந்து கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் நீடிக்கலாம்.. கிளாம்பாக்கத்துக்கு போக வேண்டிய பயணிகளின் நேரமும் கூடும், செலவும் கூடும்..

    பர்மிட்கள் தாமதமாகுமா?

    அதுமட்டுமல்லாமல் பர்மிட்கள் தொடர்ந்து தாமதமானால் பஸ் உரிமையாளர்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டு, சிலர் வேறு மாநிலங்களில் பதிவு செய்வது அல்லது வேறு வழிகளில் இயக்க முயல்வது போன்ற நிலைமை ஏற்பட்டவிடலாம்.. இதனால் தமிழக அரசுக்கும் வருவாய் இழப்பு மேலும் ஏற்படும் வாய்ப்புள்ளது..

    எனவே, கோயம்பேட்டை முழுமையாக மீண்டும் திறப்பதைவிட, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆம்னி பேருந்துகளுக்கு கட்டுப்பாடுகளுடன் தற்காலிகமாக அனுமதி வழங்கி, கிளாம்பாக்கத்துடன் இணைந்த Multi-Hub முறையை சோதனை செய்வது அரசுக்கும் பயணிகளுக்கும் சமநிலையான தீர்வாக இருக்கும்" என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

    English Summary

    Chennai Omni Bus Permit Delay.. Will Koyambedu Bus Terminus Reopen? What Decision Will the Tamil Nadu Government Take?