சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தனித்தீர்மானத்தை ஆதரித்து அமைச்சர் வன்னியரசு பேசிய போது கைதட்டுவது குறித்து பேசியதால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து வன்னியரசு பேசிய போது, "இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வருக்கும் வழிமொழிந்த திமுகவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு, தமிழர் என்ற அடையாளத்தை தொடர்ந்து தமிழகத்தில் விதைத்து வந்திருக்கிற அரசுகள்தான் தமிழகத்தில் நீடித்து வந்திருக்கிறது. அந்த வகையில் தந்தை பெரியார் விதைத்த அந்த விதைப்பு, அண்ணா முன்மொழிந்த தமிழ்நாடு என்ற பெயர், தமிழகத்தில் தமிழர்களுக்கென்ற ஒரு வரலாற்றை அரசியல்படுத்திய கருணாநிதி, அந்த வரிசையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தை விசிக வரவேற்கிறது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாட வேண்டும் என முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்த தீர்மானத்தை தனித்துவமான தீர்மானத்தை விசிக வரவேற்கிறது. முதல்வர் முன்மொழிந்த இந்த தீர்மானத்தை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானமாகத்தான் நாங்கள் கருதுகிறோம். தமிழ்மொழியை அழித்துவிட்டு ஒரே நாடு ஒரே மொழி என்ற முழக்கத்தை முன் வைத்து தேசியத்தின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிற இந்த சூழலில் முதல்வர் விஜய் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தனித்தீர்மானத்தை முன்மொழிந்த போது ஆளும் தரப்பில் இருப்போர் மட்டுமே கைத்தட்டி வரவேற்றோம். ஆனால் எதிர்வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் யாரும் கைதட்டவில்லை. இதை எல்லோரும் வரவேற்க வேண்டும். இது மிக முக்கியமான தீர்மானம். யாரையும் நான் குறை சொல்லவில்லை, மேசை ஒலி ஆளும் தரப்பை காட்டிலும் எதிர்தரப்பில் குறைவாக வந்தது என்பதால் நான் அப்படி சொன்னேன். எல்லாரும் வரவேற்றால் மகிழ்ச்சிதான். இவ்வாறு வன்னியரசு பேசியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. முதல்வரின் தீர்மானத்திற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்று ஆதரவு தெரிவித்த நிலையிலும் வன்னியரசு இவ்வாறு பேசியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.