தவெகவில் இணைய துடிக்கும் ரவீந்திரநாத்... விஜய் நிபந்தனையால் ஓபிஎஸ் குடும்பத்தில் வெடித்த மோதல்!

  • சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது தினமும் ஒரு புதிய திருப்புமுனையைச் சந்தித்து வருகிறது. ஆளுங்கட்சியாகத் தவெக உருவெடுத்துள்ள நிலையில், மாநிலத்தின் முன்னணி மற்றும் முன்னாள் அரசியல் தலைவர்கள் பலரும் தவெகவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    அந்த வரிசையில், தற்போது தென் மாவட்ட அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தின் உள்கட்சி விவகாரம்.

    Advertisement

    பனையூருக்குப் பறந்த தூது

    முன்னாள் எம்பி-யும், ஓபிஎஸ்-ன் மூத்த மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத், ஆளுங்கட்சியான தவெகவில் இணைவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. இதற்காகத் தவெகவின் தலைமை அலுவலகமான பனையூருக்குத் தனது ஆதரவாளர்கள் மூலம் தூது அனுப்பியுள்ளார் ரவீந்திரநாத்.

    ஆனால், ஆரம்பத்தில் பனையூர் தலைமை இவரது தூதுகளையும் கோரிக்கைகளையும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ச்சியான அழுத்தங்களுக்கும், ரவீந்திரநாத்தின் கோரிக்கைகளுக்கு பிறகே, தவெக தரப்பில் இருந்து ஒரு நிபந்தனையுடன் கூடிய பதில் சென்றுள்ளது.

    அப்பாவையும் கூட்டிட்டு வாங்க! - பனையூர் போட்ட செக்

    தவெக உயர்மட்டத் தலைமை, ரவீந்திரநாத்தின் கோரிக்கைக்குத் தெரிவித்த பதில் தான் தற்போது தமிழக அரசியலின் ஹாட் டாபிக். நீங்கள் மட்டும் தனியாகக் கட்சிக்கு வருவதால் பெரியளவில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. உங்களுடைய தந்தை ஓ. பன்னீர்செல்வத்தையும் உங்களுடன் தவெகவிற்கு அழைத்து வந்தால் மட்டுமே, உங்களது இணைப்பைப் பற்றி யோசிக்க முடியும் என்று பனையூர் தலைமை கறாராகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    இந்த நிபந்தனை ரவீந்திரநாத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், எப்படியாவது தவெகவில் இணைந்து தனது அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

    பதவியைத் துறக்கத் தயங்கும் ஓபிஎஸ்

    அதேசமயம், நிலைமை ஓபிஎஸ் தரப்பில் முற்றிலும் வேறாக இருக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஓபிஎஸ், தற்போது எம்.எல்.ஏவாகப் பதவி வகித்து வருகிறார். அவர் தவெகவில் இணைய வேண்டுமானால், உடனடியாகத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    ஏற்கனவே பல அரசியல் பின்னடைவுகளைச் சந்தித்த ஓபிஎஸ், கையில் இருக்கும் எம்.எல்.ஏ பதவியையும் விட்டுத்தரத் தயாராக இல்லை. திமுக உடனான உறவை முறித்துக் கொண்டு, பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்குச் செல்வது தேவையற்ற அரசியல் முடிவு என்பது ஓபிஎஸ்-ன் கணக்காக உள்ளது.

    Advertisement

    குடும்பத்திற்குள் வெடித்த கடுமையான மோதல்!

    மகனின் அவசரமும், தந்தையின் தயக்கமும் இப்போது ஓபிஎஸ் குடும்பத்திற்குள்ளேயே பெரும் காரசாரமான விவாதத்திற்கும் மோதலுக்கும் காரணமாகி உள்ளது. தனது அரசியல் எதிர்காலத்திற்காக அப்பா வழிவிட வேண்டும், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு வர வேண்டும் என்று ரவீந்திரநாத் பிடிவாதம் பிடித்து வருகிறார்.

    ஆனால், அவசரப்பட்டு இருக்கும் பதவியையும் இழந்துவிடக் கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருக்கிறார். இதன் காரணமாக, தந்தை மகன் இடையே போர்க்கொடி தூக்கப்பட்டு, குடும்பத்திற்குள் பெரியளவில் அரசியல் பூசல் வெடித்துள்ளதாகத் தேனி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    ஆளுங்கட்சியான தவெகவின் கதவுகள் இவர்களுக்குத் திறக்குமா அல்லது இந்த மோதல் ஓபிஎஸ் குடும்ப அரசியலையே முடக்கிப் போடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

    English Summary

    OPS Son OP Ravindranath Desperate to Join TVK?