அண்ணியாரே தண்ணீர் பாட்டிலுக்கு நான் தடை போடவில்லை பிரேமலதாவிடம் ஓபிஎஸ் சொன்னதும் அவையில் சிரிப்பலை

  • சென்னை: தண்ணீர் பாட்டில் விவகாரத்தில் நான் தடை போட்டதாக அண்ணியார் சொல்கிறார், நான் சொன்னதை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள் என தேமுதிக எம்எல்ஏ பிரேமலதாவுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் காமெடியாக பேசினார்.

    Advertisement

    பட்ஜெட் கூட்டத்தின் மீதான விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பதாவது: இன்றைய தினம் கைத்தறி தினம். தமிழக சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதர் ஆடை அணிந்திருப்பது பார்க்கவே பெருமையாக இருக்கிறது. விஜயகாந்த் கடைசி வரை கதர் ஆடை உடுத்தியிருந்தார்.

    Advertisement

    மக்கள் விரும்பும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் தொடர வேண்டும். விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என ஆரம்பத்திலிருந்தே நான் கோரிக்கை விடுத்து வருகிறேன். இந்த கோரிக்கை குறித்து பட்ஜெட்டில் வரும் என எதிர்பார்த்த நிலையில் எனக்கு எனது தொகுதி மக்களுக்கும் ஏமாற்றமே கிடைத்தது.

    விரைவில் அறிவிப்பீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். நெல் மணிகள் எல்லாம் திறந்தவெளியில் இருக்கின்றன. அவற்றை கிடங்குகளில் பத்திரப்படுத்துங்கள் என்பதுதான் அனைவரது கோரிக்கையாக இருக்கிறது.

    இந்த நெல் மணிகளை உற்பத்தி செய்ய விவசாயிகள் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்பது உண்மையில் விவசாயியாக இருப்போருக்கு மட்டுமே தெரியும். விவசாயத் தொழிலே நஷ்டத்தில் இருக்கிறது.

    Advertisement

    இதற்கு முந்தைய ஆட்சிகளில் 2, 3 நாட்களிலேயே கிடங்குகளுக்கு கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால் இந்த ஆட்சி புதியது என்பதால் இன்னும் கிடங்களுக்கு கொண்டு போகவில்லை.

    காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தமிழக பிரச்சனைகள் குறித்து பேச பிரதமர் நரேந்திர மோடியிடம் அனைவரையும் அழைத்துச் சென்றார்.

    எனவே முதல்வர் விஜய், அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி நீட், மேகதாது, காவிரி பிரச்சனைகளுக்காக பிரதமரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு குறித்து பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தனர்.

    Advertisement

    காவிரியில் இருந்து தண்ணீர் வந்துவிட்டது என்று பெருமைப்படும் அளவுக்கு இல்லை. வெறும் உபரி நீர் தான் வந்திருக்கிறது. விஜய் பெங்களூர் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதில் எந்த தவறும் இல்லை.

    கர்நாடகா முதல்வர் விஜய்யை வர வேண்டாம் என சொல்லிவிட்டார். அவர் மாநில சூழல் அப்படி, ஆனால் தமிழகம் வந்தாரை வாழ வைக்கும். எனவே சிவக்குமார் இங்கு வந்து முதல்வர் விஜய்யை சந்தித்து பேசலாமே!

    விருகம்பாக்கம், சாலிகிராமத்தில் டாஸ்மாக் கடைகள் சில மூடப்படாமல் இருக்கிறது. இதை சம்பந்தப்பட்ட எம்எல்ஏ கவனத்தில் கொண்டு கடைகளை மூட வேண்டும்.

    Advertisement

    அவையில் நோட்டில் கையெழுத்து போடுவதற்கு பதிலாக பயோமெட்ரிக் கொண்டு வர வேண்டும். தண்ணீர் பிரச்சனை சட்டசபையில் கூட தீரவில்லை, ஒரு பாட்டிலில் தண்ணீர் கொடுங்கள் என கேட்டேன். ஆனால் அண்ணன் ஓபிஎஸ் அதற்கும் தடையை போட்டுவிட்டார்.

    நேற்று கூட அவரிடம் "ஏண்ணா அப்படி சொன்னீர்கள்" என கேட்டேன். அதற்கு அவர், "சும்மா சொன்னேன்மா" என்றார். இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.

    உடனே ஓபிஎஸ் எழுந்து, "தண்ணீர் பாட்டிலுக்கு நான் தடை போட்டேன் என அண்ணியார் சொன்னார், நான் தடை போடவில்லை. அந்த கருத்தை நான் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். சபாநாயகர் தக்க முடிவு எடுக்கலாம்" என சொன்னதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.

    Advertisement

    இந்த தண்ணீர் பாட்டில் பிரச்சனை குறித்து பிரேமலதா பேசிய போது தனியார் மண்டபத்தில் நடந்த பொதுக் குழுவில் தன் மீது அதிமுகவினர் தண்ணீர் பாட்டில் வீசியதை நினைவுகூர்ந்து தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசினால் என்னவாகும் என ஓபிஎஸ் காமெடியாக கேட்டிருந்தார். அதற்கு தங்கம் தென்னரசு, "சொந்த அனுபவத்தை ஓபிஎஸ் சொல்கிறார்" என கலாய்த்திருந்தார்.

    English Summary

    O.Paneer Selvam says that he is not having issue with water bottles to be given in Tamil nadu Assembly.