சென்னை: அதிமுகவிலிருந்து எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக திமுகவிலிருந்து ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் முடிவில் இருக்கிறாராம். அவர் வேறு யாருமில்லை.. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் என்கின்றனர் தேனி வட்டாரத்தினர்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் கிடைக்கவில்லை.
இதனால் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்தது. விஜய்க்கு முதல் முதலில் ஆதரவளித்தது காங்கிரஸ் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. முன்னதாக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்ற நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் அவரது ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகரை அணுகினார். பிறகு மன்னிப்பு படலங்கள் அரங்கேறி அவர்கள் மீதான கட்சி தாவல் கோரும் மனு வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ஆறு பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஏற்கனவே நான்கு பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கும் நிலையில் எம்ஆர் விஜய பாஸ்கர், சி விஜயபாஸ்கரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போதைய சூழலில் ஏழு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இந்த எண்ணிக்கை 12 தொகுதிகள் வரை அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் தென் மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்குடன் வலம் வந்த ஒரு எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்ற தகவல் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ஆனால் அதிமுகவில் இல்லை. அவர் திமுகவை சேர்ந்தவர் என்கின்றனர். அதுவும் வேறு யாருமில்லை அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஆன ஓ பன்னீர்செல்வம் தான் என்கின்றனர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு தொடர்ந்து சட்ட போராட்டங்களை நடத்தியும் கை கொடுக்காதால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலுக்கு முன்பு திமுகவில் இணைந்தார் ஓ பன்னீர்செல்வம். தொடர்ந்து அவருக்கு அவரது சொந்த தொகுதியில் போட்டியிட திமுக வாய்ப்பளித்தது. அவருக்கு முன்னாள் கட்சியை சேர்ந்த அன்வர் ராஜா உள்ளிட்டோருக்கு சில கட்சி பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ்-க்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தேர்தல் முடிந்த பிறகும் தனக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பாவது கிடைக்கும் என ஓ பன்னீர்செல்வம் எதிர்பார்த்தார். ஆனால் தற்போது வரை எதுவும் கிடைக்கவில்லை. ஒரு காலத்தில் அவை முன்னவர், நிதியமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர் கட்சியில் பொருளாளர், மாவட்ட செயலாளர் என பல பதவிகளை வகித்த தன்னை திமுக கண்டுகொள்ளவில்லை என்ற மனக்குமுறலில் ஓ பன்னீர்செல்வம் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அவரது மகனையும் திமுக தலைமை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் ஓபிஎஸ்-ன் மகனான ஓபி ரவீந்திரநாத் குமார் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து விட்ட நிலையில் தனது தந்தையும் திமுகவில் இருக்கிறார். இதனால் தான் மட்டும் தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றால் நன்றாக இருக்காது என்பதால், அவரையும் திமுகவுக்கு அழைத்துச் செல்ல மகன் திட்டமிட்டு இருப்பதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இந்த நிலையில் திமுகவில் உரிய மரியாதை கொடுக்காததால் தானும் தமிழக வெற்றி கழகத்திற்கு சென்று விடலாமா என்ற யோசனையில் ஓ பன்னீர்செல்வம் இருப்பதாக சொல்கின்றனர். ஏற்கனவே ராஜினாமா செய்த எம்எல்ஏக்களோடு சேர்ந்து நானும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விடலாம் என தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனைகள் ஈடுபட்டதாகவும், அதுவே சரியான முடிவாக இருக்கும் என அவர்கள் சொல்லியதாக தேனி வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ் தரப்பிலும் திமுக தரப்பிலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இன்னும் சில வாரங்களில் பெரிய அளவிலான தகவல்கள் வெளிவரும் என்கின்றனர் தேனி வட்டாரத்தினர்.தவெக
தமிழக வெற்றிக் கழகம்
ஓ பன்னீர்செல்வம்
ஓபிஎஸ்-க்கு பொறுப்பு
திமுக தலைமை
ராஜினாமா
தேனியில் பரபரப்பு