சென்னை: கொளத்தூர் தொகுதியில் EVM மெஷின்களை சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணியின்போது 30% மெஷின்களில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறியிருக்கிறார்.
அவர் மேலும் கூறியதாவது, "இன்று அண்ணா அறிவாலயத்தில் வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே மதுரையில் தென் மண்டல வழக்கறிஞர்கள் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் கலந்துரையாடல் கூட்டம், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
ஆளும் கட்சியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, காவல்துறையை ஏவி.. அரசை விமர்சித்து பேசுபவர்களை எடுத்ததும் கைது செய்வது பற்றி இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டது. உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள அனைத்து வழிகாட்டுதலையும் மீறுவதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபோன்ற கைது நடவடிக்கைகளை எப்படி சட்டப்பூர்வமாக கையாள்வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது. வழக்கறிஞர் அணியை மறுசீரமைத்து.. இளைஞர்களை தலைமை பொறுப்பில் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது. இதில் முக்கியமாக EVM மெஷின் எவ்வளவு குறைபாடு உள்ளது என்பது குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது. 2024ல் திமுகவால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் EVM மெஷின் சரிபார்க்கப்பட்டபோது.. 14 EVM மெஷின்களில் 30% குறைபாடு உடையவையாக கண்டறியப்பட்டிருக்கின்றன. எனவே, அதை சட்டத்தின் மூலமாக எப்படி நிவாரணம் தேடுவது.. EVM மெஷின் படிப்படையாக குறைக்கப்பட வேண்டும்.. காகித வாக்கு சீட்டு முறை மீண்டும் வர வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இனி வரும் நாட்களில் டெல்டா மற்றும் கோவை மாவட்டங்களில் மண்டல வழக்கறிஞர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும். இறுதியாக கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெறும். மறுபுறம் திமுக தலைவர்கள் மீது பரப்பப்படும் குற்றச்சாட்டுகள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறோம். இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் காவல்துறை FIR கூட போடாததை நாங்கள் கண்டித்திருக்கிறோம். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படுகிறது" என்று கூறியுள்ளார்.