“40 போலீசார் அலுவலகத்துக்குள் புகுந்து கைது செய்தனர்”.. அன்பில் மகேஷ் வழக்கில் பரபரத்த வாதம்!

  • சென்னை: "சுமார் 40 போலீசார் அலுவலகத்துக்குள் புகுந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கைது செய்தனர். இதை பார்க்கும்போது தமிழகத்தில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது." என சென்னை ஐகோர்ட்டில் இன்று வழக்கறிஞர் பி.வில்சன் வாதம் வைத்தார்.

    Advertisement

    முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய கேட்டு அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், "இந்த மனு மீது எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது. அன்பில் மகேஷ் வேண்டுமானால் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்" என்று கூறி வழக்கு விசாரணையை அக்டோபர் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Advertisement

    அதன்படி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை நீதிபதி லட்சுமி நாராயணன் தள்ளுபடி செய்ததால், அவரை அக்டோபர் 26 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

    இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் மனு மீண்டும் இன்று நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    புழலுக்குப் போன உதயநிதி ஸ்டாலின்! ஜெயிலில் உள்ள அன்பில் மகேஷுடன் சந்திப்பு! 3 நாளில் 2வது முறை!
    Advertisement

    அப்போது அன்பில் மகேஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, "அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே காவல்துறை தனது அலுவலகத்தில் புகுந்து அவரை கைது செய்தது.

    கைது செய்ததற்கான ஆவணத்தில் தனது அலுவலக முகவரியே இடம்பெற்றுள்ளது. சுமார் 40 போலீசார் அலுவலகத்துக்குள் வந்து கைது செய்தனர். இதை பார்க்கும்போது தமிழகத்தில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு வழக்கறிஞரின் அலுவலகத்திற்குள் காவல்துறை நுழைவது தொடர்பாக முறையான நிலையான வழிகாட்டு நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்" என்று வாதங்களை முன்வைத்தார்.

    Advertisement

    இதற்கு பதில் அளித்த மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், "காவல்துறையினர் வழக்கறிஞரின் அலுவலகத்துக்கு வெளியே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். பின்னர் அலுவலகத்துக்குள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்" என்றார்.

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்த குற்றம் என்ன.. மறைக்கப்பட்டதா தீர்ப்பு? 20 பக்க தீர்ப்பு என்ன?

    மேலும், "இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நண்பரும் தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொருளாளருமான முத்துக்குமார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

    Advertisement

    அதேபோன்று அன்பில் மகேஷ் பொய்யாமொழியை விசாரணைக்காக காவலில் எடுக்க அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளது" என்றும் தெரிவித்தார்.

    இருதரப்பின் காரசார விவாதங்களைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எ.வ வேலு தாக்கல் செய்த எஃப்ஐஆர் ரத்து மனு தொடர்பாக ஒரு லீகல் பாயிண்ட் குறித்து தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளதால் இந்த எஃப்ஐஆர் ரத்து மனுவின் விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    English Summary

    “Around 40 police officers entered the office and arrested Anbil Mahesh Poyyamozhi. Seeing this, the question arises: is there a police rule in Tamil Nadu?” argued advocate P Wilson in High Court today.