படப்பை, பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகங்கள்.. நிரந்தர அதிகாரிகள் இல்லையா? பொதுமக்கள் சிக்கல் என்ன?

  • சென்னை: படப்பை, பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகங்களில் நிரந்தர சார்பதிவாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு FAIRA கூட்டமைப்பு அவசர கோரிக்கை விடுத்துள்ளது. பொறுப்புச் சார்பதிவாளர்களால் பொதுமக்களின் பத்திரப்பதிவுகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் ஆ. ஹென்றி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

    Advertisement

    அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    Advertisement

    "தமிழ்நாடு முழுவதும் 595 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் பொதுமக்களின் நிலம், வீட்டுமனை, வீடு உள்ளிட்ட அசையாச் சொத்துகளுக்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதில் படப்பை மற்றும் பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகங்கள் முக்கியமான பதிவுச் சேவை மையங்களாக உள்ளன.

    சென்னை படப்பை, பூந்தமல்லி

    சென்னை மாநகரின் விரிவாக்கம், புதிய குடியிருப்புப் பகுதிகளின் வளர்ச்சி, தொழில் நிறுவனங்களின் வருகை, வேலைவாய்ப்புகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் காரணமாக படப்பை, பூந்தமல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் குடியேற்றம் அதிகரித்துள்ளது. இதனால் இந்த இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தினமும் ஏராளமான பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

    Advertisement

    ஆனால், இந்த முக்கியமான அலுவலகங்களில் நிரந்தர சார்பதிவாளர்கள் இல்லாமல், வெவ்வேறு அலுவலர்கள் பொறுப்புச் சார்பதிவாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருவதாக ஹென்றி தெரிவித்துள்ளார்.

    பத்திரப்பதிவில் சிக்கல்

    பத்திரப்பதிவு என்பது ஆவணங்களைப் பெற்று பதிவு செய்வது மட்டுமல்ல. பதிவுச் சட்டம், சொத்துரிமை தொடர்பான சட்ட விதிகள், அரசாணைகள் மற்றும் பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சட்ட நுணுக்கங்களை அறிந்து செயல்பட வேண்டிய முக்கியமான பணி.

    ஆனால், தற்காலிகப் பொறுப்பில் பணியாற்றும் சில அலுவலர்களுக்கு ஆவணங்கள் தொடர்பான சட்ட நுணுக்கங்களிலும் பதிவுத்துறை நடைமுறைகளிலும் போதிய அனுபவம் இல்லாததால், பொதுமக்கள் பதிவு செய்யக் கொண்டுவரும் ஆவணங்கள் காலதாமதத்திற்கு உள்ளாகின்றன. சில நேரங்களில் ஆவணங்களைப் பதிவு செய்ய முடியாது என்று கூறி திருப்பி அனுப்பும் நிலையும் ஏற்படுகிறது.

    Advertisement

    இதனால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒரு குடும்பம் தங்களது வாழ்நாள் சேமிப்பைப் பயன்படுத்தி நிலம் அல்லது வீட்டுமனை வாங்கும்போது, விற்பவர், வாங்குபவர், சாட்சிகள் என அனைவரையும் ஒருங்கிணைத்து பத்திரப்பதிவுக்கு வருகின்றனர். வங்கி நடவடிக்கைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளையும் முடித்துவிட்டு வரும் நிலையில், ஆவணங்களில் உள்ள சட்ட நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறி பதிவு செய்யாமல் நிலுவையில் வைத்தால் அவர்களின் நேரமும் பணமும் வீணாகிறது.

    மேலும், பதிவு செய்யப்பட்ட அசல் ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து வீட்டுக் கடன் அல்லது தொழில் கடன் பெற வேண்டியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு பொறுப்புச் சார்பதிவாளர் பரிசீலிக்காமல் விட்டுச் செல்லும் ஆவணத்தை, அடுத்ததாகப் பொறுப்பேற்கும் அலுவலர் மீண்டும் பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் நிர்வாகத் தொடர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.

    Advertisement

    நிரந்தர நியமனம் அவசியம்

    அதிக எண்ணிக்கையில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் படப்பை, பூந்தமல்லி போன்ற முக்கியமான அலுவலகங்களில் நிரந்தர சார்பதிவாளர்களை நியமிப்பது அவசியம். இதன் மூலம்தான் பொதுமக்களுக்கு விரைவான, தடையற்ற மற்றும் சட்டப்படியான சேவைகளை வழங்க முடியும் என்று ஹென்றி தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, படப்பை சார்பதிவாளர் அலுவலகத்தில் நிரந்தர சார்பதிவாளரையும், பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் நிரந்தர சார்பதிவாளரையும் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    நிரந்தர நியமனம் நடைபெறும் வரை போதிய அனுபவமும் சட்ட அறிவும் கொண்ட அலுவலர்களை மட்டுமே பொறுப்புச் சார்பதிவாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள ஆவணங்களை விரைவாகப் பரிசீலித்து சட்டப்படி உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Advertisement

    சார் பதிவாளர் அலுவலகங்கள்

    மேலும், பொதுமக்கள் ஒரே பணிக்காக மீண்டும் மீண்டும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வருவதைத் தவிர்க்கும் வகையில் தடையற்ற பதிவுச் சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    பொதுமக்களின் சொத்து என்பது அவர்களின் வாழ்நாள் உழைப்பின் அடையாளம். அந்தச் சொத்துகளுக்கான சட்டப்பூர்வமான ஆவணப் பதிவுச் சேவையில் நிர்வாகத் தடைகள் இருக்கக்கூடாது. பதிவுத்துறை என்பது அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் துறை மட்டுமல்ல; பொதுமக்களின் சொத்துரிமை சார்ந்த நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டிய மக்கள் சேவைத் துறையும் ஆகும்.

    எனவே, பொதுமக்களின் நலன் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு படப்பை, பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகங்களில் நிரந்தர சார்பதிவாளர்களை நியமிக்க பதிவுத்துறை தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று FAIRA கூட்டமைப்பின் சார்பில் டாக்டர் ஆ. ஹென்றி வலியுறுத்தியுள்ளார்.

    English Summary

    Padappai, Poonamallee Sub Registrar Offices.. Why Are People Facing Problems With Property Registration?