திண்டுக்கல்: பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி விவகாரம் தொடர்பாக பழனி கோயில் முன்னாள் இணை ஆணையரிடம் சிபிசிஐடி போலீசார் 6 மணி நேரம் 30 நிமிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில்,
1880 ஆம் ஆண்டு முதல் நிலம் சம்பந்தமான ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து அந்த ஆவணங்களைசரிபார்க்கும் பணியை சிபிசிஐடி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் வெறும் 2 கோடி ரூபாய்க்கு மோசடிப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வழக்கு தொடர்பாக, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், பழனி அடிவாரம் போலீசார் புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த 15.07.2026 அன்று இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டது. அரசின் உத்தரவையடுத்து, வழக்கு ஆவணங்கள் அனைத்தும் இணையதளம் வாயிலாகச் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் திண்டுக்கல் அலுவலகத்தில் முதற்கட்ட தகவல் அறிக்கை (FIR) தயார் செய்து, பழனியில் சம்பந்தப்பட்ட இடத்தில் கள ஆய்வும் மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த 17.07.2026 அன்று சிபிசிஐடி தென்மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் சாஜிதா திண்டுக்கல் வருகை தந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினார். அன்று புகார் அளித்த கண்காணிப்பாளர் முருகானந்தம், அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன், கோயில் செயல் அலுவலர் கணபதி, ஓய்வுபெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னச்சாமி ஆகியோரிடம் சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி, பழனி பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் கூடுதல் பத்திரப்பதிவுத்துறை சுதா மல்லிகா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதேவேளையில், தென்மண்டல எஸ்பி சாஜிதா பழனியில் நேரடியாக விசாரணை நடத்தினார். மேலும், பழனி கோயிலின் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட பலருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 10.30 மணி முதல் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில், பழனி கோயிலின் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வுபெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி சின்னச்சாமி மற்றும் அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன் ஆகிய நால்வரிடமும் அதிகாரிகள் மொத்தமாக 6மணி நேரம் 30 நிமிடம் நடைபெற்ற விசாரணை மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இதற்கு இடையில் மதியம் 1:30 மணிக்கு வெளியே வந்த பழனி கோயில் முன்னாள் இணை ஆணையர் கூறும்போது, உணவு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆஜரானார். அப்போது சிபிசிஐடி அதிகாரிகள் கேட்ட கோப்புகளை கொடுத்துள்ளதாகவும் 1880 ஆண்டுகளில் இருந்து இந்த இடம் தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி அதிகாரிகள் கேட்டுள்ளனர். அவை அனைத்தும் தற்போது கொடுக்கப்பட்டதாகக் கூறினார். பின் மீண்டும் மதியம் 2.30 மணிக்கு விசாரணைக்கு சென்று மாலை 6:00 மணிக்கு வெளியே வந்த பழனி கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து கூறும்போது, வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கேட்டிருந்தனர் அதனை கொடுத்துள்ளோம் என தெரிவித்தார். இந்த நிலையில் 1980 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 150 ஆண்டுகால நில ஆவணங்களை சிபிசிஐடி போலீஸாரிடம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். தண்டபாணி சுவாமி மடத்தின் நிலத்தை நிர்வாகம் செய்தது யார்? அந்த நிலம் கைமாறும் வரை என்ன நடந்தது? என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் 150 ஆண்டு கால ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் தண்டபாணி சுவாமி மடத்தின் நிலத்தை நிர்வாகம் செய்த போது கோவில் அலுவலர்களுக்கு வெளிநபர்களால் தொல்லை கொடுக்கப்பட்டது சார்ந்து நடைபெற்று வருகிறது.பழனி நில மோசடி
சிபிசிஐடி
பத்திரப்பதிவுத்துறை
இந்து சமய அறநிலையத்துறை
கோவில் நிலம்
நில ஆவணங்கள்