சென்னை: பழனி முருகன் திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், போலி ஆவணங்கள் மூலம் தனி நபர் பெயருக்கு சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேட்டின் பின்னணியில் உள்ள அதிகார வர்க்கம் மற்றும் நில மாஃபியாக்களின் சதியை முழுமையாக அம்பலப்படுத்த, இந்த வழக்கைத் தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த 1.40 ஏக்கர் நிலம், 1888-ஆம் ஆண்டே தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் பராமரிப்பிற்காக, எக்காரணத்தைக் கொண்டும் விற்கவோ, கைமாற்றவோ கூடாது என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்டதாகும். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலத்தை ஆக்கிரமித்திருந்த தனியார் நபர்களிடமிருந்து, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கடந்த செப்டம்பர் 12, 2025 அன்றுதான் இந்து சமய அறநிலையத்துறை இந்த நிலத்தை முழுமையாக மீட்டெடுத்தது. மீட்கப்பட்ட அந்த இடம், கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வாகனங்களை நிறுத்தும் இலவச பார்க்கிங் தளமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒரே நாளில் நடந்த ₹100 கோடி மோசடி ஆனால், கடந்த ஜூலை 6, 2026 அன்று, வழக்கமான சார்பதிவாளர் விடுப்பில் சென்றிருந்த ஒரு நாளில், பொறுப்பு சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன் என்பவர், இந்த ₹100 கோடி மதிப்புள்ள அரசு மற்றும் கோவில் நிலத்தை, வெறும் ₹2 கோடி மதிப்பிலான போலி ஆவணங்களைக் கொண்டு இரு தனியார் நபர்களின் பெயருக்குப் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். அதாவது இவருக்கு ஒரு நாள் டிரான்ஸ்பர் இங்கே போடப்படுகிறது. அதே நாள் இவர் நிலத்தை கிரயம் செய்து வைக்கிறார். இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானவுடன், பத்திரப்பதிவுத்துறை உடனடியாகச் சார்பதிவாளரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மேலும், பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் ஐந்து கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படக் காரணம் என்ன? அறநிலையத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர்கள் இதுகுறித்து அவசரப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, இந்த நிலப் பதிவை முடக்க ஏற்கனவே பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததை உறுதி செய்தனர். இவ்வளவு தடைகள் இருந்தும், மிகத் துணிச்சலாக ஒரே நாளில் இந்த மோசடி அரங்கேறியுள்ளதால், இதன் பின்னணியில் மிகப் பெரிய நெட்வொர்க் இருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கிறார்கள். அந்த துறையை சேர்ந்தவர்களுக்கு தெரியாமல் எப்படி கோவில் நிலம் கைமாற்றப்பட்டு இருக்கும் என்ற கேள்வி உள்ளது.. நில ஆக்கிரமிப்பு மாஃபியாக்கள், போலி ஆதார் மற்றும் பான் கார்டுகளை உருவாக்கிய நெட்வொர்க் மற்றும் இதற்குத் துணையாக இருந்த துறை அதிகாரிகள் யார் யார் என்பதை வெளிக்கொண்டு வர விரிவான விசாரணை தேவையப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, இது தற்போது சிபிசிஐடி சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் இந்த வழக்கின் கோப்புகளைப் பெற்றுக்கொண்டு, முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட அந்தப் பத்திரத்தை சட்டப்பூர்வமாக முற்றிலுமாக ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நீதிமன்ற ஆக்சன் பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை தனி நபருக்கு பதிவு செய்ததை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றக் கிளை. மேலும், வேண்டுமென்றே வழக்கமான அலுவலரை விடுப்பில் அனுப்பி, பொறுப்பில் வந்தவர் மூலம் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், இது முற்றிலும் முறைகேடான காரியம்.. எனினும், சார்பதிவாளர் பணியிடை நீக்கம் என்பது போதுமானதாக இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.பின்னணி என்ன?